2025-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.
தேசிய அளவில் சிறந்த பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள் என்ற அளவிலும், பல்கலைக்கழகம், பொறியியல், நிர்வாகம், சட்டம், மருத்துவம், மருந்தியல் உள்ளிட்ட 16 பாடப்பிரிவுகள் அளவிலும் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. கற்றல், கற்பித்தல், உள்கட்டமைப்பு வசதி, ஆராய்ச்சி, உருவாக்கப்படும் பட்டதாரிகளின் நிலை போன்ற அம்சங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
2025-ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து ஏழாவது ஆண்டாவது முதலிடத்தை தக்கவைத்து சென்னை ஐஐடி சாதனை படைத்துள்ளது. சிறந்த பல்கலைக்கழகங்களில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம் பிடித்துள்ளது. டெல்லி ஜேஎன்யு இரண்டாம் இடத்தையும், ம்ணிபால் பல்கலைக்கழகம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலில் டெல்லி ஹிந்து கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. மாநில அரசு பல்கலைக்கழக பட்டியலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த அண்ணா பல்கலைக்கழகத்தை கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலை. இரண்டாம் இடத்துக்கு தள்ளியுள்ளது. இந்த பட்டியலில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 10-வது இடத்தை பிடித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த பட்டியலில் இடம்பெற்ற 100 கல்வி நிறுவனங்களில் 17 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.