சென்னை: அரசுப் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கான ஸ்லாஸ் தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் கற்றல் நிலையை மேம்படுத்தும் பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ் ஆகியோர் அனைத்து மாவட்ட முதன் மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: ”அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு பாட கற்றல் இடைவெளியை கண்டறிய பிப்ரவரி 4, 5, 6-ம் தேதிகளில் மாநில கற்றல் அடைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு பள்ளியிலும் மாநில அடைவு ஆய்வில் அந்தப் பள்ளி பெற்ற தரநிலை ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் எந்த தர வரிசையில் உள்ளது என்ற விவரத்தை பெற்றோர்கள், எஸ்எம்சி உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மாணவர்களின் பார்வைக்கு எளிதில் புலப்படும் வகையில் தலைமை ஆசிரியரின் அறையில் இடம்பெற செய்ய வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் பள்ளி தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 3, 5, 8-ம் வகுப்புக்கு எந்த தரநிலையில் உள்ளது என்ற விவரத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
தாங்கள் பணிபுரியும் பள்ளியானது மாவட்டத்தில் தலை சிறந்த பள்ளி என ஆய்வறிக்கையில் இடம்பெறத்தக்க வகையில் ஒவ்வொரு ஆசிரியரும் தங்களின் அனுபவங்களை கொண்டு நல்ல முடிவுகளை கொண்டு வருவதில் ஈடுபாடுடன் இருத்தல் வேண்டும். கற்றலில் பின்னடைவு உடைய மாணவர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள் எடுக்க வேண்டும்.
மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பதை வாரத்தில் 3 நாட்கள் அலுவலர்கள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஒன்றியத்தில், மாவட்டத்தில் குறைந்த தரநிலையுடன் பின்தங்கிய பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்க ளுக்கு சிறப்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். சிறந்த முறையில் மாணவர்களை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்லாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் பெற வேண்டும்” என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.