சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தின்படி, 98.31% பெற்று சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தொடர்ந்து விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி ஆகிய மாவட்டங்கள் அடுத்த 4 இடங்களைப் பிடித்துள்ளன.
சிவகங்கை – 98.31%
விருதுநகர் – 97.45%
தூத்துக்குடி – 96.76%
கன்னியாகுமரி – 96.66%
திருச்சி – 96.61%
அரசுப் பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற முதல் ஐந்து மாவட்டங்களிலும் சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி, திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்கள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.
தமிழகத்தில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை சென்னையில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (மே.16) காலை 9 மணியளவில் வெளியிட்டார்.
அதன்படி, 10-ம் வகுப்பில் ஒட்டுமொத்தமாக 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவியர் 95.88 சதவீதமும், மாணவர்கள் 91.74 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் 2.25% அதிகரித்துள்ளது. இருப்பினும், வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவியர் 4.14 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வெழுதிய 12,290 மாற்றுத் திறனாளி மாணவர்களில் 11,409 பேரும் (92.83%), சிறைவாசிகளில் 237 பேரில் 230 பேரும் (97.05%) பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாற்று பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வெழுதினார், அவரும் வெற்றி பெற்றுள்ளார்.
பள்ளிகள் வாரியான தேர்ச்சி விகிதம்: அரசுப் பள்ளிகளில் 91.26%, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 93.63% மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 97.99% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது.
தேர்வு முடிவுகளை மற்றும் www.tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும் அறியலாம். பள்ளி மாணவர்கள், தனி தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்படும்.
மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.