புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பில் 96.90 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரியில் தனி கல்விவாரியம் இல்லை. அதனால் புதுச்சேரி, காரைக்காலில் தமிழக அரசு பாடத்திட்டத்தை அரசுப் பள்ளிகளில் பின்பற்றி வந்தன. ஆனால், அங்கு கடந்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்ததால் தனியார் பள்ளிகள் மட்டும் தமிழக அரசு பாடத்திட்டத்தை பின்பற்றி வருகின்றன.
கடந்த மார்ச் – ஏப்ரல் 2025-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 4,290 மாணவர்களும் 3,977 மாணவிகளும் ஆக மொத்தம் 8,267 பேர் தனியார் பள்ளிகளில் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் இன்று (மே 16) வெளியான பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளின்படி தனியார் பள்ளிகளில் பயின்ற 8,011 மாணவ மாணக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 4,109 மாணவர்களும் 3,902 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி 96.90% ஆகும்.