கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்து வந்தவர் கீதாலட்சுமி. கடந்த 2022-ல் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த மார்ச் மாதம் அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் பணி நிறைவு பெற்றார். இதையடுத்து, பல்கலைக்கழக பொறுப்பு துணைவேந்தராக பதிவாளர் தமிழ்வேந்தன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்ய 3 பேர் கொண்ட தேர்வுக்குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கே.மோகன்ராம் ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்விக்கவுன்சில் சார்பாக புதுடெல்லி இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளர் விஞ்ஞானி பி.ராமசுந்தரம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மேலாண்மை குழு சார்பில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி முன்னாள் இயக்குநர் எஸ்.ராமநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வுக்குழு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு மூன்று பேராசிரியர்களின் சுயவிவரத்தைப் பெற்று தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும். அதைத்தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தரை தெரிவு செய்து தமிழக அரசு அறிவிக்கும் என வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.