மிகவும் முக்கியமான அடிப்படை அறிவியல் துறைகளில் ஒன்று வேதியியல். வேதியியல் தொடர்பான சில பொறி யியல், தொழில்நுட்பப் படிப்புகள் குறித்த அறிமுகம்:
கெமிக்கல் இன்ஜினியரிங்: அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கெமிக்கல் இன்ஜினியரிங் (வேதிப் பொறியியல்), முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவாகியுள்ளது. பெட்ரோலியப் பொருள்கள், உரம், சிமென்ட், மருந்துகள், பெயின்ட்டுகள், செயற்கை நூலிழை
கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கத் தேவை யான இயந்திரங்களை வடிவமைப்பது, தொழில் நுட்பங்களை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டது இந்தப் படிப்பு. இந்தப் படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டுத் துறையிலும் அறிமுகம் இருக்கும்.
பெட்ரோலிய, எரிவாயு சுத்திகரிப்பு நிறுவனங்கள், உரத் தயாரிப்பு நிறுவனங்கள், சாயத் தொழிற்சாலைகள், பார்மசூட்டிகல் நிறுவனங்கள், ரப்பர் அண்ட் பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்கள், பெயின்ட், காகித உற்பத்தி நிறுவனங்கள், ஃபுட் புராசசிங் நிறுவனங் கள், வேதி ஆலைகள் போன்ற தொழில் நிறுவனங் களில் கெமிக்கல் இன்ஜினியரிங் தொடர்பான படிப்புகளைப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். விண்வெளித் துறை, அணுசக்தித் துறை, பாதுகாப்புத் துறை போன்ற துறைகளிலும் கெமிக்கல் இன்ஜினியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சாத்தியம் உண்டு.
தமிழ்நாட்டில் பல பொறியியல் கல்லூரிகளில் கெமிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவில் இளநிலைப் பட்டப்படிப்பு உள்ளது. நாட்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான காரைக்குடியில் உள்ள மத்திய மின்வேதியியல் ஆய்வுக் கழகத்தில் (CECRI) கெமிக்கல் அண்ட் எலெக்ட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் இளநிலைப் பட்டம் பெறலாம்.
பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்: பெட்ரோலியம், இயற்கை எரிவாயு பிரித் தெடுப்பு, உற்பத்தி, சுத்திகரிப்பு, அது தொடர்பான உபரிப் பொருள்கள் தயாரிப்பு, பெட்ரோலியத்தைப் பூமியிலிருந்து எடுப்பதற்கான தொழில்நுட்ப சாதனங்கள், அதன் செயல்பாடுகள், சுத்திகரிப்பு முறைகள் போன்ற பெட்ரோலியம் தொடர்பான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பொறியியல் படிப்பு இது.
உலகெங்கிலும் பெட்ரோலியம், அது தொடர் பான பொருள்களின் தேவையும் பயன் பாடும் அதிகரித்துவரும் சூழ்நிலையில் இந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடு களிலும் உள்ள பெட்ரோலிய, இயற்கை எரிவாயு உற்பத்தி, சுத்திகரிப்பு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. பெட்ரோலியம் தொடர்பான தொழில்நுட்பப் படிப்புகளைப் படிப்பதற்கு நாட்டில் உள்ள முக்கியக் கல்வி நிறுவனம் டேராடூனில் உள்ள பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி ஸ்டடீஸ் பல்கலைக்கழகம் (UPES).
பிளாஸ்டிக் டெக்னாலஜி: ரப்பர், பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழில்நுட்பங்கள், ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட பொருள்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் படிப்பு இது. டயர் தயாரிப்பில் ரப்பர் முக்கியத்துவம் வகிப்பதால் இந்தப் படிப்பைப் படித்தவர்களுக்கு ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் வேலை கிடைக்கும். இதேபோல, பிளாஸ்டிக் தொடர்பான தொழில் நிறுவனங்களிலும் வேலை கிடைக்கும்.
பிளாஸ்டிக் தொழில்நுட்பம் தொடர்பான முக்கியக் கல்வி நிறுவனமான சென்னையில் உள்ள சிபெட் (CIPET) கல்வி நிறுவனத்தில் பிஇ பிளாஸ்டிக் டெக்னலாஜி படிக்கலாம். அத்துடன், பிளாஸ்டிக் மோல்ட் டெக்னாலஜி தொடர்பான டிப்ளமோ, போஸ்ட் டிப்ளமோ படிக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதேபோல, சில கல்வி நிறுவனங்களில் ரப்பர் டெக்னலாஜி இளநிலைப் பட்டப் படிப்பைப் படிக்கலாம்.
செராமிக் டெக்னாலஜி: செராமிக்கைப் பயன்படுத்தி பொருள்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் செராமிக் டெக்னாலஜி மாணவர்களுக்குக் கற்றுத் தரப்படும். இந்தப் படிப்பை முடித்தவர்களுக்குப் பொதுத் துறை நிறுவனங்கள், இந்திய விண்
வெளி ஆராய்ச்சி நிறுவனம், பாது காப்புத் துறை, அணு ஆராய்ச்சி நிலை யங்கள், இன்ஸ்டிடியூட் ஃபார் பிளாஸ்மா ரிசர்ச் போன்ற பல்வேறு அமைப்புகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன. எனினும், செராமிக் தொழில் நுட்பம் தொடர்பான படிப்புகளை வழங்கும் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
டெக்ஸ்டைல் டெக்னாலஜி: நூல் தயாரிப்பு, நூல்களை வெண்மை யாக்குதல், மிளிர வைத்தல், சாயம் போடுதல், செயற்கை இழைகளைத் தயாரித்தல் உள்ளிட்ட ஐவுளித் தொழில் தொடர்பான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் படிப்பு டெக்ஸ்டைல் டெக்னாலஜி என்கிற ஐவுளி தொழில்நுட்பப் படிப்பு. அத்துடன் ஐவுளித் தொழில்நுட்பத் துறையில் கணினி பயன்பாட்டுக்கான தொழில்நுட்பங்களும் இதைப் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும்.
டெக்ஸ்டைல் டெக்னாலஜி படித்தவர்களுக்கு டையிங், ஃபினிஷிங், டெக்னிக்கல் சர்வீசஸ், ரிசர்ச் அண்ட் டெவலப்மென்ட் போன்ற துறைகளில் ஜவுளித் துறை நிறுவனங்களில் வேலை கிடைக்கும். அரசுத் துறை மட்டுமல்லாமல், தனியார் துறைகளிலும் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.
– கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com