சென்னை: பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்துதல் பணியின்போது தினமும் 24 தாள்களை மட்டும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை காட்டும் பாரபட்சமான நடவடிக்கையை மாற்ற வேண்டும்.
தற்போது 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு முதன்மை தேர்வாளரின் கீழ் 6 உதவி தேர்வாளர்கள் (AE) மற்றும் ஒவ்வொரு உதவி தேர்வாளருக்கும் ஒரு நாளைக்கு 24 விடைத்தாள்கள் மதிப்பீடு செய்ய வழங்கப்படுகின்றன.
அதேநேரம் 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஒவ்வொரு முதன்மை தேர்வாளருக்கு 10 உதவி தேர்வாளர்களும், ஒவ்வொரு உதவி தேர்வாளருக்கும் தினமும் 30 விடைத்தாள்களும் கொடுக்கப்படுகின்றன. மேலும், 12-ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிக்கு ஊதியமும் அதிகமாக வழங்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு மட்டும் அதிக விடைத்தாள் மற்றும் குறைந்த உழைப்பு ஊதியம் என்பது பாகுபாடு காட்டுவதாக உள்ளது.
எனவே, 12-ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வழங்கப்படுவது போல் பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கும் தினமும் 24 விடைத்தாள் மட்டுமே வழங்க வேண்டும். சமமான உழைப்பூதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.