சிவகங்கை: விடுதி மாணவர்கள் ஏஐ தொழில்நுட்பம் கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சிவ.வீ.மெய்யநாதன் கூறியது: “தமிழகத்தில் புதிதாக 40 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டன. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டத்தில் கல்லூரியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
கடந்த 4 ஆண்டுகளில் 36 கல்லூரி விடுதிகள் தொடங்கப்பட்டன. நடப்பாண்டில் 10 விடுதிகள் திறக்கப்பட உள்ளன. எங்குமே கல்லூரி விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டே இல்லை.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் உள்ள நூல்களை விடுதி மாணவர்கள் ஆன்லைனில் படிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. விடுதி மாணவர்களுக்கு ஏஐ தொழில்நுட்பம் கற்கவும், வைஃபை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள நூலகத்தை தொடர்புகொள்ள முடியும். அனைத்து விடுதிகளும் ரூ.10.59 கோடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன” என்று அவர் கூறினார்.
முன்னதாக, விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். தமிழரசி எம்எல்ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி வரவேற்றார். பிற்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை ஆணையர் சம்பத் பேசினார். அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினர். சீர்மரபினர் நல வாரிய துணைத் தலைவர் அருண்மொழி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, நகராட்சித் தலைவர் சிஎம்.துரைஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.