சென்னை: வாசிப்பு இயக்க புத்தகங்களுக்கான மாணவர்களின் படைப்புகளை ஜூலை 16-ம் தேதிக்குள் அனுப்புமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக வாசிப்பு இயக்கம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் குழந்தைகளின் வாசிப்பு நிலைக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற 4 பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல்கட்டமாக 53 புத்தகங்களும், 2-ம் கட்டமாக 70 புத்தகங்களும் அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் 3-ம் கட்டமாக 81 புத்தகங்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, 4-ம் கட்ட புத்தகங்கள் உருவாக்கப்படவுள்ளன. இந்த புத்தகங்கள் முழுவதும் மாணவர்களின் படைப்புகளுடன் கொண்டு வரப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் படைப்புகளை, ஆசிரியர்கள் எமிஸ் தளம் மூலமாக கடந்த ஜூன் 16-ம் தேதிமுதல் அனுப்பி வருகின்றனர்.
வாசிப்பு இயக்கத்தின் 4-ம் கட்ட புத்தகங்களுக்கு படைப்புகளை அனுப்புவதற்கான கால அவகாசம் ஜூலை 16-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. எனவே, மாணவர்களிடமிருந்து படைப்புகளை விரைவாகப் பெற்று அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.