சென்னை: வாசிப்பு இயக்கத்தின் 4-ம் கட்ட புத்தகங்களை மாணவர்களின் படைப்புகளாக கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வி துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தி அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்துவதற்காக ‘வாசிப்பு இயக்கம்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், குழந்தைகளின் வாசிப்பு நிலைக்கு ஏற்ப நுழை, நட, ஓடு, பற என்ற 4 பிரிவுகளில் புத்தகங்கள் தயாரிக்கப்படுகின்றன.
பள்ளிகளுக்கு முதல் கட்டமாக 53 புத்தகங்கள், 2-ம் கட்டமாக 70 புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், 3-ம் கட்டமாக 81 புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, 4-ம் கட்டத்துக்காக புதிய புத்தகங்கள் தயாரிக்கப்பட உள்ளன. மாணவர்களின் படைப்புகளாக இவற்றை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் கதைகள், தேவைக்கேற்ப ஆசிரியர் குழுவால் வடிவமைக்கப்படும். வாசிப்பு இயக்கத்தின் அடிப்படைகளை புரிந்துகொண்டு, நுழை, நட, ஓடு, பற என்ற வகையின்கீழ் கதைகள் இருக்க வேண்டும். எளிய மொழியில், சிறிய வாக்கியங்களில் இருப்பது அவசியம். படைப்புகளை தமிழிலேயே அனுப்ப வேண்டும். ஒரு மாணவர் அதிகபட்சம் 5 கதைகள் அனுப்பலாம். தேர்வாகும் மாணவ எழுத்தாளரின் பெயர் புத்தக அட்டையில் அச்சிடப்படும்.
இதற்காக அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் படைப்புகளை ஜூன் 16 (நாளை) முதல் ஜூலை 16-ம் தேதி வரை ஆசிரியர்கள் எமிஸ் தளம் மூலம் அனுப்பலாம். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.