இந்த அவசர உலகில் `டயட்’ என்கிற சொல் பிரபலமாகிவருகிறது. உடல் நலமாக இருப்பதற்கு, ஆரோக்கியமான உணவுப் பழக்கம் முக்கியம். சத்தான உணவு வகைகளைச் சாப்பிட்டு நல்ல உடல்நிலையைப் பேணுவதற்கும் நோய்வாய்ப்பட்ட சூழ்நிலையில் எத்தகைய உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கும் டயட்டீஷியன்களும் நியூட்ரிஷனிஸ்டுகளும் தேவைப்படுகிறார்கள்.
மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எத்தகைய உணவைச் சாப்பிட வேண்டும் என்பதைக் கற்றுத்தருவதற்காக 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மருத்துவமனைகளில் சிறப்பு ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாகத்தான் டயட்டீஷியன்களும் நியூட்ரிஷனிஸ்டுகளும் முக்கியத்துவம் பெறத் தொடங்கினார்கள்.
பெரிய மருத்துவமனைகளில் இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளிகள் என்று பல்வேறு நோயாளிகள் எத்தகைய உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதைப் பரிந்துரைப்பதற்கு உணவியல் நிபுணர்கள் வந்துவிட்டார்கள். அதேபோல, விளையாட்டு வீரர்களுக்குத் தகுந்த உணவைப் பரிந்துரைப்பதும் இந்த நியூட்ரிஷன் நிபுணர்கள்தான்.
உணவியல் நிபுணர்கள்: தொடக்கத்தில் ஹோம் சயின்ஸ் என்கிற மனையியல் பாடப்பிரிவுகளைப் படித்தவர்களுக்கு உணவியல் பாடங்கள் கற்றுத்தரப்பட்டன. தற்போது நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ், நியூட்ரிஷன் அண்ட் ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மென்ட், கிளினிக்கல் நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் என்று இத்துறையில் பல்வேறு வகையான இளநிலைப் பட்டப் படிப்புகள் வந்துவிட்டன. பிளஸ் டூ வகுப்புகளில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்தவர்கள் இவற்றில் சேரலாம்.
உணவின் தன்மை, உணவில் உள்ள சத்துகள், உடல் வளர்ச்சிக்குத் தேவையான உணவு, ஊட்டச்சத்துக் குறைபாடும் அதை எதிர்கொள்ளும் முறைகளும், ஊட்டச்சத்தின் தன்மைகள் குறையா மல் அதைப் பயன் படுத்துவது எனப் பல்வேறு அம்சங்கள் இப்பாடப்பிரிவுகளில் கற்றுத்தரப்படுகின்றன.
சைல்டு சைக்காலஜி, பயோ கெமிஸ்ட்ரி, ஹியூமன் டெவலப்மென்ட், ஃபேமிலி டைனமிக்ஸ், ஃபேமிலி மீல்ஸ் மேனேஜ்மென்ட், நோயாளிகளுக்கு உணவு முறை போன்ற பல்வேறு அம்சங்கள் இப்படிப்பைப் படிக்கும் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படும்.
எங்கு படிக்கலாம்? – ஹோம் சயின்ஸ் படிப்புகளைக் கற்றுத்தருவதில் முன்னோடிக் கல்வி நிறுவனமாகத் திகழும் கோவை அவிநாசிலிங்கம் மனையியல் பல்கலைக்கழகம் உள்படத் தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கல்வி நிறுவனங்களில் நியூட்ரிஷன் தொடர்பான படிப்புகள் உள்ளன. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அங்கமாக மதுரையில் செயல்படும் சமுதாய அறிவியல் கல்லூரி – ஆராய்ச்சி இன்ஸ்டிடியூட்டில் பி.எஸ்சி. ஆனர்ஸ் நியூட்டிரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் என்கிற நான்கு ஆண்டுப் படிப்பைப் படிக்கலாம்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் – விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. எக்ஸர்சைஸ் பிசியாலஜி அண்ட் நியூட்ரிஷன் மூன்று ஆண்டு பட்டப் படிப்பில் பிளஸ் டூ வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் சேரலாம். இங்குள்ள எம்.எஸ்சி. எக்சர்சைஸ் பிசியாலஜி அண்ட் நியூட்ரிஷன் இரண்டு ஆண்டு முதுநிலைப் படிப்பில் அறிவியல் பட்டம் பெற்ற மாணவர்கள் சேரலாம்.
நாட்டிலேயே நியூட் ரிஷன் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங் களில் ஒன்று ஹைதராபாத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன். தற்போது, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) கீழ் செயல்பட்டுவரும் இந்தக் கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி.
அப்ளைடு நியூட்ரிஷன், ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷன் படிப்புகள் உள்ளன. இங்குள்ள பத்து வார நியூட்ரிஷன் முதுநிலைச் சான்றிதழ் படிப்பில் எம்.பி.பி.எஸ். படித்தவர்களும் நியூட்டிரிஷன், டயட்டிக்ஸ், பிசியாலஜி, பயோ கெமிஸ்ட்ரி போன்ற அறிவியல் பாடப்பிரிவு பட்டதாரிகளும் சேரலாம்.
மைசூருவில் சென்ட்ரல் ஃபுட் டெக்னாலஜி அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (CFTRI) கல்வி நிலையத்தில் எம்.எஸ்சி. ஃபுட் டெக்னாலஜி படிக்கலாம். இங்கே நியூட்ரிஷன் பயாலஜி பாடப்பிரிவில் ஒருங்கிணைந்த எம்எஸ்சி–பிஎச்டி படிக்கலாம்.
மணிப்பூரில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டியில் எம்எஸ்சி அப்ளைடு ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷன் இரண்டு ஆண்டுப் படிப்பு உள்ளது. டெல்லியில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோம் எகனாமிக்ஸ் கல்லூரியில் ஹோம் சயின்ஸ், ஃபுட் டெக்னாலஜி பாடப் பிரிவுகளில் நான்கு ஆண்டு பி.எஸ்சி. (ஆனர்ஸ்) படிக்கலாம். இது தவிர, நியூட்ரிஷன் தொடர்பான டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் உள்ளன.
நியூட்ரிஷன் படிப்பைப் படித்த வர்கள் மருத்துவமனைகளில் டயட்டீஷியன் ஆகலாம். விளையாட்டுத் துறைகளில் டயட்டீஷியன் களுக்குத் தவிர்க்க முடியாத இடம் உள்ளது. உணவியல் தொடர்பான படிப்புகளைப் படித்தவர்களுக்குப் பெரிய நட்சத்திர ஹோட்டல்கள், சமூக நலத் துறை, அரசுத் திட்டங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஃபுட் புராசசிங் நிறுவனங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும்.
– கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com