வங்கிப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றிருந்தாலும் நேர்முகத் தேர்வை எதிர்கொள்வது தேர்வர்களுக்குச் சவாலானதாக இருக்கலாம். முறை யாகத் தயார் செய்து நேர்முகத் தேர்வை அணுகினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். பொதுவாக நேர்முகத் தேர்வுகள் ஆங்கிலத்தில்தான் அமைந்திருக்கும்.
சில நேரத்தில் ஆங்கிலத்தோடு உங்கள் தாய் மொழியிலும் இருக்கலாம். நேர்முகத் தேர்வின் தொடக்கத்தில், உங்களைப் பற்றி ஒரு நிமிடத்தில் கூறவும், எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள், உங்கள் ஊரின் முக்கியத்துவம் என்ன என்பது போன்ற கேள்விகளைக் கேட்கலாம். அடுத்து, இளங்கலை பட்டப்படிப்பை முடித்த நீங்கள் ஏன் மேற்கொண்டு முதுகலைப் படிப்பைத் தொடரவில்லை?
உங்கள் குடும்பத்தில் யாரேனும் வங்கியில் பணிபுரிகிறார்களா? அப்படியெனில் அவர் உங்களுக்கு என்ன உறவு? வங்கிப் பணியை நீங்கள் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? தற்போது ஏதேனும் வேலையில் இருக்கிறீர்களா? ஆம் எனில், அப்பணியைத் துறப்பதற்கான காரணம் என்ன? நீங்கள் செய்த முக்கிய ‘புராஜெக்ட்’ ஒன்றைப் பற்றி விவரிக்க முடியுமா என்பது போன்று கல்வி, வேலை தொடர்பான கேள்விகளை எதிர்ப்பார்க்கலாம்.
உங்களின் பலமும், பலவீனமும் என்ன? பலவீனத்தைப் போக்க என்ன வழிமுறைகளைக் கையாள்கிறீர்கள்? நீங்கள் போற்றும் நபர் யார்? உங்கள் வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் எனத் தீர்மானம் செய்துள்ளீர்கள் என்பது போன்று உங்களைப் பற்றிய கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டியிருக்கலாம்.
வங்கி நேர்முகத் தேர்வு என்பதால், உங்கள் கணினி அறிவைப் பற்றிய கேள்விகள், இந்தியாவின் எந்த அமைப்பு வங்கிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது? முதல்முதலாக வங்கிகள் எப்போது தேசிய மயமாக்கப் பட்டன? ‘RRB’இன் விரிவாக்கம் என்ன? வங்கிகளுக்கு நிதி எப்படிக் கிடைக்கிறது என்பது போன்ற கேள்விகளோடு இந்திய அரசமைப்பைப் பற்றியும், பொது அறிவு தொடர்பாகவும் ஒரு சில கேள்விகள் இடம்பெறலாம்.
கூடுதலாக, பயிர் பாதுகாப்பு இன்சூரன்ஸ் பற்றி உங்கள் கருத்து என்ன? ’Bank Rate’ என்றால் என்ன? தற்போதைய விகிதம் என்ன? ‘CRR’ இன் விரிவாக்கம் என்ன? தற்போதைய விகிதம் என்ன? ‘SLR’இன் விரிவாக்கமும் தற்போதைய விகிதமும், சைபர் குற்றங்கள் என்பவை யாவை? அவற்றை எவ்வாறு குறைப்பது? ‘OROP’இன் விரிவாக்கம். அதனைப் பற்றிய உங்களின் கருத்து என்ன என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படலாம்.
பொதுவாக ஒரு வினாவுக்கு நீங்கள் அளிக்கும் விடையிலிருந்தே அடுத்த வினாவைக் கேட்பது வழக்கம். இவை மாதிரி வினாக்களே. எனினும் இதற்கான விடைகளைத் தயார் செய்துகொள்ளுங்கள். உங்களின் விடைகள் நேர்மறை எண்ணம் கொண்டதாக இருப்பது அவசியம். விடை தெரியாத வினாக்களுக்குத் தவறாக விடை அளிக்காமல் ‘மன்னிக்கவும், தெரியவில்லை’ எனப் பதில் அளிக்கலாம்.
பொதுவாக நேர்முகத் தேர்வின்போது விவாதங்களில் ஈடுபடாதீர்கள். மேலும் வங்கிகள், நிதி தொடர்பான அரசு செயல்முறைகள், மக்கள் நலத் திட்டங்கள், நடப்பு நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டிருப்பது நல்லது.
– கட்டுரையாளர், போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்; success.gg@gmail.com