யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே, தேர்வு கூடத்தை ஒதுக்கீடு செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று யுபிஎஸ்சி தலைவர் அஜய் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பணிக்கு தேவையான அலுவலர்கள் யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். தமிழக அரசு பணிக்கு தேவையான அலுவலர்கள், டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதேபோல, அந்தந்த மாநிலங்களில் மாநில தேர்வாணையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் அனைத்து மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் 2 நாள் நிலைக்குழு கூட்டத்துக்கு டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தை யுபிஎஸ்சி தலைவர் அஜய் குமார் நேற்று தொடங்கி வைத்தார்.
நிலைக்குழுவின் தலைவர் அலோக் வர்மா, டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகரன் மற்றும் பல்வேறு மாநில அரசு பணியாளர் தேர்வாணையங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், அரசு துறை பணியாளர்களை தேர்வு செய்வதில் நேர்மை, வெளிப்படை தன்மையை உறுதிசெய்வது, சிறந்த நடைமுறைகளை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது, தேர்வு நடைமுறைகளில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, தேர்வு தொடர்பான வழக்குகளை மேலாண்மை செய்வது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் யுபிஎஸ்சி தலைவர் அஜய் குமார் கூறியதாவது: நாடு முழுவதும் குடிமை பணிகளுக்கு சிறந்த பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதி செய்வதில் அரசு பணியாளர் தேர்வாணையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த பல ஆண்டுகளாக பணியாளர்களை நியாயமாக தேர்வு செய்ததன்மூலம் யுபிஎஸ்சி மக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறது.
இந்த நம்பகத்தன்மை மட்டுமின்றி, நேர்மை, வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதையும் மத்திய, மாநில தேர்வாணையங்கள் உறுதிசெய்வோம்.
யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே, தேர்வு கூடத்தை ஒதுக்கீடு செய்யும் புதிய நடைமுறை விரைவில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.