சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான காலஅவகாசம் ஜூலை 15-ம் தேதியுடன் (நேற்று) முடிவடைந்தது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவர்களின் நலன் கருதி கடைசி நாள் ஜூலை 31 வரை நீட்டிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 4-ம் தேதி கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். அதன்பிறகு, சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறும். பொது கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்கும். கலந்தாய்வு மற்றும் சேர்க்கை பணிகள் முடிவடைந்து முதலாம் ஆண்டு முதுகலை மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.