மீன்தொழில்கள் மேலாண்மை தொடர்பான எம்பிஏ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை முட்டுக்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக மீன்வள வணிக கல்லூரியில் எம்பிஏ (மீன்தொழில்கள் மேலாண்மை) படிப்பு வழங்கப்படுகிறது. நடப்பு 2025-26 கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைனில் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம் 20 இடங்கள் உள்ளன. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதி ஆண்டு பட்டப் படிப்பு பயில்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
இந்த படிப்பில் சேர விரும்புவோர் பல்கலைக் கழகத்தின் இணையதளம் (www.tnjfu.ac.in) மூலமாக அக்.24-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப் பிக்கலாம். பட்டப் படிப்பு மதிப்பெண், பெற்ற விருதுகள், சிறப்பு பயிற்சி, கருத்தரங்குகளில் பங்கேற்பு, பணி அனுபவம், விளையாட்டு, என்எஸ்எஸ், என்சிசி செயல்பாடு, நேர்காணல் என ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். நவம்பர் 17-ம் தேதி வகுப்புகள் தொடங்கும். பயிற்சிக் கட்டணம் உள்ளிட்ட இதர விவரங்களை இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.