சென்னை: தமிழக மாநில உருது அகாடமியின் துணை தலைவராக முஹமது நயிமூர் ரஹ்மானை மீண்டும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உருதுமொழியின் மேம்பாட்டுக்காக கடந்த 2000-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் தமிழ்நாடு மாநில உருது அகாடமி உருவாக்கப்பட்டது. இந்த அகாடமியின் தலைவராக உயர் கல்வித் துறை அமைச்சர் செயல்படுவார்.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டும், அதைத் தொடர்ந்து கடந்த 2024-ம் ஆண்டும் மாநில உருது அகாடமி புனரமைக்கப்பட்டு துணை தலைவராக முஹமது நயிமூர் ரஹ்மான் நியமிக்கப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரது பணிக்காலத்தை 24.2.2027 வரை மேலும் 3 ஆண்டு காலம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதோடு கல்வியாளர்கள் எம்.பி.அமானுல்லா, வி.எம்.ஹபீபுர் ரஹ்மான், சஜ்ஜாத் சுல்தான், ஏ.அப்துல் அஜிஸ், எம்.பி.,ஷேக் பசுலுல்லா, சையத் முஜிப் பைஸ் கத்ரி, ஒய்.எம்.ஹபிபுல்லா ரூமி, ஜி.எம். நசீரா , சி. கைசர் அஹமத், டி.முபாரக் உன்னிசா, நாசர் முஹம்மது மேடக்கர், ஆணைக்கர் இம்தியாஸ் அஹ்மத், மண்டி முஹம்மத் அஸ்லாம் ஆகிய 14 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான அரசாணையை உயர் கல்வித் துறை செயலர் பொ.சங்கர் வெளியிட்டுள்ளார். மாநில உருது அகாடமியின் துணை தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள முஹமது நயீமூர் ரஹ்மான் மற்றும் உறுப்பினர்கள் உருது அகாடமியின் தலைவரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.