மதுரை: “படிப்பதற்காக செல்போன்களை வெறும் 5 முதல் 10 சதவீதம் மாணவர்கள்தான் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமூக வலைதள பயன்பாட்டுக்காகவே, தற்போது மாணவர்கள் செல்போன்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள்,” என்று மதுரை மாநகராட்சி ஆணையர் சித்ரா கவலை தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி மற்றும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி இணைந்து மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி இன்று (ஏப்.9) தமுக்கம் மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், ஆணையர் சித்ரா பேசுகையில், “மாணவ, மாணவிகள் சிறப்பாக 12ம் வகுப்பு தேர்வுகளை எழுதியிருந்தால் நல்லது. மோசமாக எழுதியிருந்தாலும் கவலைப்படாதீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வி திறனுக்கு தகுந்தவாறு, உயர் கல்வியை தேர்ந்தெடுப்பதற்காகதான் இதுபோன்ற உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
பொறியியல், மருத்துவம், ஐடி மற்றும் கட்டிடக்கலை படிப்புகளை தாண்டி, எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள உயர்கல்வியில் நிறைய படிப்புகள் உள்ளன. அந்த படிப்புகளை எப்படி தேர்ந்தெடுக்கலாம்?, என்ன படிக்கலாம்?, அரசு உதவிகள் எப்படி பெறலாம்? என்பதற்காக இந்த நிகழ்ச்சியில் கல்வித்துறை நிபுணர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
மாணவ, மாணவிகள் செல்போன்கள் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. செல்போன்கள் பயன்படுத்துவது தவறில்லை. ஏனென்றால் இன்றைய உலகில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தெரிந்து கொள்வது அவசியமாக இருக்கிறது. ஆனால், அவற்றை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். படிப்பதற்காக செல்போன்களை வெறும் 5 முதல் 10 சதவீதம் மாணவர்கள்தான் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சமூக வலைதள பயன்பாட்டுக்காகவே, மாணவர்கள் அதிகம் செல்போன்களை பயன்படுத்துகிறார்கள்.
சமூக வலைதளங்களில் பள்ளி மாணவர்கள் அக்கவுண்ட் வைத்துள்ளனர். சமூக வலைதள அக்கவுண்ட் வைத்திருப்பதால் நமக்கு எந்த பயனும் இல்லை. செல்போன்களை பள்ளி மாணவ, மாணவிகள் கவனமாக பயன்படுத்துங்கள். செல்போன்களால் நிறைய சைபர் குற்றங்கள் நடக்கின்றன. ஆசிரியர்கள் இதுதொடர்பாக உங்களுக்கு விழிப்புணர்வு செய்து இருப்பார்கள்.
மாணவர்கள் சிறப்பாக படித்து எதிர்காலத்தில் நல்ல வேலை பெறுவதுதான் இலக்காக இருக்க வேண்டும். குறிப்பாக மாணவிகள், எதிர்காலத்தில் இந்த சமூகத்தில் சொந்த காலில் நிற்க கல்வியும், சிறந்த வேலையும் அவசியமாகும். அதன்பிறகுதான் திருமணம் பற்றி யோசிக்க வேண்டும். அதற்கான கல்வி வழிகாட்டுதலுக்காகதான் மாநகராட்சி இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது,” என்றார்.
மேயர் இந்திராணி பேசுகையில், “நானும் ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் மாணவர்களுக்கு சொல்கிறேன், கல்வி ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் மிக முக்கியமானது. ஒரு சமூகம் வகுப்பறையில் கட்டமைக்கப்படுகிறது என்று கல்வியாளர்கள் கூறுகிறார்கள். கல்வி, அறிவையும், திறமையும், ஆளுமையைத் தரும். எதிர்கால வளர்ச்சி என்பது பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பெருமை சேர்ப்பதாக அமைய வேண்டும். ஒழுக்கத்துடன் கூடிய கல்வி மிக அவசியமானது. இதுபோன்ற மாணவர்கள் நலன் சார்ந்த நிகழ்ச்சிகளை மாநகராட்சி தொடர்ந்து ஏற்பாடு செய்யும்,” என்றார்.
மாநகராட்சி மேயர் இந்திராணி தலைமை யில் நடந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் சித்ரா முன்னிலை வகித்தார். துணை மேயர் நாகராஜன், மண்டலத்தலைவர் சரவண புவனேஷ்வரி, கல்விக்குழு தலைவர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் முருகன், மாநகராட்சி கல்வி அலுவலர் ஜெய்சங்கர் மற்றும் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 2,500 மாநகராட்சி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மாணவிகள் கலைநிகழ்ச்சிகள், கல்வியாளர்களின் வழிகாட்டுதல்கள் இடம்பெற்றன.