சென்னை: மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் நேற்று அமல்படுத் தப்பட்டது. மாணவர்களின் உடல்நலனை காக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. வகுப்பு நேரத்தில் மாணவர்கள் தண்ணீர் பருகாமல் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
அதை தடுக்கும் வகையில் மாணவர்கள் தண்ணீர் பருகுவதை ஊக்குவிக்க, ‘வாட்டர் பெல்’ எனும் புதிய திட்டத்தை தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த திட்டம் அனைத்து பள்ளிகளிலும் நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் தண்ணீர் பருக ஏதுவாக காலை 11 மணிக்கும், பகல் 1 மணிக்கும் மற்றும் மாலை 3 மணிக்கும் வாட்டர் பெல் அடிக்கப்பட்டது. பெல் அடித்ததும் தண்ணீர் பருகுவதற்காக 2 நிமிடங்கள் இடைவெளி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்துமாணவர்கள் வாட்டர் பாட்டில்களில் இருந்து தண்ணீர் பருகினர். மாணவர்கள் தண்ணீர் பருகுவதை தலைமை ஆசிரியர்கள் கண்காணித்தனர்.