2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் முயற்சியாகும். இத்திட்டமானது ஆண்டுதோறும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் திறன் சார்ந்த பயிற்சிகள் மூலம் தொழில்துறைக்குத் தயாரான திறன்மிகு சமுதாயத்தை உருவாக்கும் இலட்சிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
முதலாம் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, தற்போது வரை சுமார் 42 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டம் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ITI மாணவர்களுக்கு எவ்வித நிதிச்சுமையும் இன்றி கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வழிகாட்டிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம்திறன்களை வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது.
இந்தத் திட்டம் நகர்ப்புற மாணவர்களுக்கு இணையாக ஊரகப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் திறன்களையும் உயர்த்துவதற்கு Microsoft, IBM, ORACLE, GOOGLE, CISCO, HCL, Infosys, AWS, Siemens, FANUC,Dassault, L&T போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்குகிறது.
இந்தப் பயிற்சிகள் Big Data, Internet of Things, Robotics, Artificial Intelligence, Machine Learning, Industry 4.0, Robotics, Building Information Modelling போன்ற துறைகளில் தொழில்நுட்ப நிபுணர்களால் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்திற்கான முழு செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்கிறது. திறன் வகுப்புகளை மாணவர்கள் எளிதில் பெறுவதற்கு ஏற்றவாறு பிரத்தியேக இணையதளம் ஒன்று (www.naanmudhalvan.tn.gov.in) இயக்கப்படுகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் ஒரு பகுதியாக, அரசுக் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான “Placement Readiness Trainingthrough Corporate Volunteering” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் மூலம் தொழில் துறை நிபுணர்கள் நேரடியாக மாணவர்களுக்கு வழிகாட்டி, வேலைவாய்ப்பிற்குத் தேவையான அத்தியாவசிய திறன்கள் குறித்து பயிற்சி வழங்குகின்றனர். இதில் 28 முன்னணி நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதுவரை 131 தன்னார்வலர்கள் 22 அரசு கல்லூரிகளில் பங்கேற்று, மொத்தம் 393 மணி நேர தன்னார்வ பங்களிப்பின் மூலம் 3,899 மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கியுள்ளனர்.
நான் முதல்வன் நிரல் திருவிழா: இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமை திறனை வளர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசுத் துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்டநுட்பவியல் சவால்கள் (problem statements) இறுதி ஆண்டுப் பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
நான் முதல்வன் SCOUT திட்டமானது, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு உலகளாவியதொழில்முறை பயிற்சியினை வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வழங்கும் திட்டம் ஆகும். Data Science, AI, Bio Technology போன்ற துறைகளில் மாணவர்களை உலகத்தரம் கொண்ட வல்லுநர்களாக மேம்படுத்த இந்தத் திட்டம் உதவுகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தர்ஹம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 100 மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக AI மற்றும் Data Science துறையில் பயிற்சி வழங்கப்பட்டது. இவர்களில் சிறந்த 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தர்ஹம் பல்கலைக்கழகத்தில் நேரடிபயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சி பெற்ற25 மாணவர்களில், 13 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களான பேங்க் ஆப் நியூயார்க்,சிட்டிகார்ப், Zoho, HCL டெக் போன்ற பெருநிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆண்டு வருமானமாக 10 லட்சம் முதல் 31 லட்சம் வரை பெறுகின்றனர். இதர 12 மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர்கின்றனர்.
அடுத்த கட்டமாக இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டைச் சார்ந்த 10 மாணவிகள் ஜப்பான் நாட்டில் Internship பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுள், 6 மாணவிகள் நெக்ஸ்ட் ஜென் கார்ப் என்ற நிறுவனத்தில் கணினி துறையில் தொழில் பயிற்சி பெற்று, 5 மாணவிகள் அதே நிறுவனத்தில் முழு நேர பணி நியமனம் பெற்று ஆண்டு வருமானமாக 21 லட்சம் பெறுகின்றனர்.
மேலும், 4 மாணவிகள் ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் Bio-Technology சார்ந்த ஆராய்ச்சி பயிற்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் ஆராய்ச்சி சார்ந்த பயிற்சியினை தொடர இந்தியாவில் உள்ள ஐஐடி ரூர்க்கியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த 4 மாணவிகளும் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பது மேலும் சிறப்பு வாய்ந்ததாகும்.
தமிழ்நாடு திறன் போட்டி (TNSkills Competition) மூலம், இந்திய திறன் போட்டியில்தமிழ்நாடு தனது சாதனையை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டில் 23 பதக்கங்களுடன் 10ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, 2024 ஆம் ஆண்டில் 40 பதக்கங்களை வென்று 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. வரும் இந்திய திறன் போட்டி 2026-ஐமுன்னிட்டு, தமிழ்நாட்டிலிருந்து இதுவரை 28,000-த்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இது, திறன் மேம்பாட்டில் தமிழ்நாடு எட்டியுள்ள வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
நான் முதல்வன் – கல்லூரிக் கனவு திட்டம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள், தொழில் துறை விருப்பங்கள் மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் குறித்து விரிவான தகவலை வழங்குகிறது. மேலும், கல்விக் கடன் மற்றும் உதவித்தொகை பெறுவதற்கான வழிமுறைகள் மாணவர்களுக்கு எளிதாக்கப்பட்டுள்ளன. கடந்த 2024 கல்வியாண்டில் மொத்தம் 1,87,000 மாணவர்களும், 2025 ஆம் ஆண்டில் மட்டும் 81,149 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். இதனால் இதுவரை மொத்தம் 2,68,149மாணவர்கள் இத்திட்டத்தின் வாயிலாக நேரடியாக பயனடைந்துள்ளனர்.
அரசுப் பணி ஒன்றையே கனவாக கொண்டுள்ள ஆயிரமாயிரம் இளைஞர்களின் கனவை மெய்ப்படுத்தவும் குறிப்பாக ஒன்றிய அரசு நடத்தும் U.P.S.C, எஸ். எஸ். சி, இரயில்வே, மற்றும் வங்கித் துறை, போன்ற அரசுப்பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளித்து இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறும் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் “நான் முதல்வன்” – போட்டித் தேர்வுகள் எனும் தனிப்பிரிவு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது.
UPSC முதல்நிலைத்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ், மதிப்பீட்டு தேர்வின் மூலம் ஆண்டுதோறும் 1000மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பத்து மாதங்களுக்கு மாதம் ரூ.7,500ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. UPSC முதன்மை தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகையும், UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உறைவிடப் பயிற்சியும் வழங்கப்படுகிறது. சென்னை அண்ணா நகரில் போட்டித்தேர்வுக்கு தயார் ஆகும்மாணவர்களுக்கு படிப்பகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
நான் முதல்வன் UPSC முதன்மைத்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டம் – 2024 மூலம் மொத்தம் 559 மாணவர்கள் பயனடைந்தனர்; அதேபோல், UPSC முதல்நிலைத்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டம் (2024–25) மூலம் 1000 மாணவர்கள் பயனடைந்து, 316 பேர் முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதேபோல், மத்திய அரசின் SSC, Railways மற்றும் Banking தேர்வுகளுக்குத் தயாராகும் 1000 மாணவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய பகுதிகளில் 6 மாத கால உண்டு உறைவிடப் பயிற்சி வழங்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட SSC cum Railways மற்றும் Banking உண்டு உறைவிடப் பயிற்சி மூலம் 510 மாணவர்கள் பயிற்சி பெற்று, 40 பேர் வங்கிப்பணித்தேர்வுகளிளும், 19 பேர் SSC தேர்வுகளிலும் மற்றும் 2 பேர் ரயில்வே துறை சார்ந்த பணித்தேர்வுகளிளும் வெற்றி பெற்றுள்ளனர்.
2025 ஆம் ஆண்டு, UPSC முதல்நிலைத் தேர்வு ஊக்கத்தொகை திட்டத்திற்கான மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு, 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கிடையில், சென்னையில் All India CivilService Coaching Centre-இல் 225 மாணவர்களுக்கும், மதுரை மற்றும் கோயம்புத்தூரில் தலா 100 மாணவர்களுக்கும் உறைவிடப் பயிற்சி தொடங்கவுள்ளது.
அதேபோன்று, SSC cum Railways மற்றும் Banking Residential Coaching Programme க்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்; இவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர், மதுரை பகுதிகளில் உறைவிடப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இதுதான் தமிழ்நாட்டின் மாணவர்களின் எதிர்காலத்துக்கு ஒளி வீசும் “நான் முதல்வன்” திட்டத்தின் வெற்றிப் பயணம். இந்த மாபெரும் திட்டம், கல்வி மற்றும் தொழில்துறையை இணைக்கும் பாலமாக இருந்து, இளைஞர்களை அவரவர் துறையில் உலகத்திறன் வாய்ந்த முதல்வராக உருவாக்குகிறது.
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில்…
பட்டதாரி பிரேமா, தென்காசி: எதற்காக பெண் பிள்ளைகளை படிக்க வைக்கிறார் என்று பலர் என் தந்தையை கேள்வி கேட்பர். இதனால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஐசிசிப் டிசைனிங் அண்ட் வெரிபிகேஷன் என்ற படிப்பை பயின்று செமிகண்டெக்டர் நிறுவனத்தில் நான் உட்பட 9 பேர் தற்போது பணியாற்றிவருகிறோம். இன்றைக்கு என் தந்தை பெருமையாக உணர்வார் என்று நினைக்கிறேன்.( பிரேமா தனது முதல் மாத ஊதியத்தை தந்தையிடம் கொடுத்தபோது அரங்கமே உணர்ச்சிவயப்பட்டது)
மாணவி ஜாலிஜா ஜோன்ஸ், கன்னியாகுமரி: நான் முதல்வன் திட்டத்தில் தற்போதைய டெக் யுகத்துக்கு தேவையான படிப்புகளை சொல்லி கொடுக்கின்றனர். கடைசி ஆண்டின்போது ஜப்பானில் நெக்ஸ்டன் என்ற நிறுவனத்தில் இண்டர்ன்ஷிப் செய்யும் வாய்ப்பு வந்தது. அதன்மூலமாக நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம். அந்த இண்டர்ஷிப்பின் கடைசி நாளில் எங்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது.
அதில் எங்களுக்கு ஆண்டுக்கு ரூ.21 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தது. தற்போது ஜப்பானிய மொழியையும் கற்று வருகிறேன். இன்னும் ஓராண்டில் ஜப்பானில் பணியாற்ற உள்ளோம். இதற்கு உதவியாக அமைந்தது நான் முதல்வன் திட்டம்தான். அதற்காக முதல்வருக்கும், இந்த திட்டத்துக்கும் நன்றி(ஜப்பானிய மொழியில் நன்றி கூறினார்).
மாணவர் விஷ்ணு, வேலூர்: நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். ஆங்கிலத்தில் ஒருவரிடம் எப்படி உரையாட வேண்டும் என நான் முதல்வன் திட்டத்தில் தான் கற்றுக் கொண்டேன். இதன்மூலமாக ஒருவர் என்னிடம் ஆங்கிலத்தில் பேசினால், புரிந்து கொண்டு பதிலளிக்க முடிகிறது. இதுதவிர்த்து சிசிடிவி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கற்றுத் தருகிறார்கள். இவற்றை நான் தனியார் மூலம் கற்றுக் கொண்டால் ரூ.40 ஆயிரம் வரை செலவாகும்.
பத்தாம் வகுப்பு முடித்த பிறகு கல்வியை தொடர வேண்டாம் என எண்ணினேன். ஆனால், நான் முதல்வன் திட்டம் மூலம் டிப்ளமோ படிப்புக்கு வழிகாட்டி, கூடுதலாக ஏராளமான திறன்சார் பயிற்சிகளும் வழங்கி வருகின்றனர். எனக்கு இஸ்ரோவில் பணிபுரிய வேண்டுமென விருப்பம். இதற்கும் இந்த திட்டத்தின் மூலம் போட்டித் தேர்வில் பங்கேற்பதற்கான வழிகாட்டலும் வழங்கப்படுகிறது.
மாணவி தீபஸ்ரீ, சென்னை: எனது தந்தை மீன்பிடி தொழில் செய்து வருகிறார். குடும்ப சூழ்நிலையால், என்னால் கல்லூரியில் சேர்ந்து இளநிலை படிப்பு படிக்க முடியாததால், டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். டிப்ளமோவில் முதலாமாண்டில் இருந்து, ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பெற்றேன்.
2 புத்தொழில் நிறுவனங்கள் எனது திறன்களை அறிந்து, வீட்டில் இருந்து பணிபுரியும் வகையில், எனக்கு பகுதிநேர வேலைவாய்ப்பை கொடுத்தார்கள். நான் படித்து கொண்டே வேலை செய்துவருகிறேன். எனது வருமானத்தில் தங்கையை கல்லூரியில் படிக்க வைத்து குடும்பத்தின் முதல் பட்டதாரியாக உருவாக்கி இருக்கிறேன். விரைவில் நானும் இளநிலை படிப்பை தொடங்கிவிடுவேன்.
மாணவர் சுனித்குமார், திருவண்ணாமலை: அரசு கலை கல்லூரியில் படித்து வருகிறேன், 2-ம் ஆண்டு படிக்கும் போது சர்வதேச இண்டர்ஷிப் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எங்கள் கிராமம் மிகவும் சிறியது. விமானத்தில் சென்ற முதல் நபர் நான்தான். சியோல் நகரில் கஜான் பல்கலைக்கழகத்தில் பையொ-நேனோ அப்ளிகேசன் ஆய்வு மையத்தில் 15 நாட்கள் இண்டர்ன்ஷிப்பில் இருந்தோம். மேலும் சில பல்கலை.களுக்கு அழைத்து சென்று நேரடியாக உபகரணங்களில் பயிற்சி கொடுத்தனர்.
இண்டர்ன்ஷிப் முடித்து வந்த 6 பேருக்கும் மாதம் ரூ.60,000 உதவித்தொகையுடன் கொரியாவில் படிக்க வாய்ப்பு வழங்கியுள்ளனர். சிறிய கிரமத்தில் இருந்த எனக்கு வெளிநாட்டு சென்று படிக்கும் வாய்ப்பை நான் முதல்வன் திட்டம் வாயிலாகதான் கிடைத்தது.