மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் வருகை பதிவு உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அதனுடன் இணைந்த மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பேராசிரியர்கள், அலுவலர்களின் வருகையைப் பதிவு செய்ய ஆதாருடன் கூடிய பயோமெட்ரிக் முறை கடைபிடிக்கப்படுகிறது. அதில், குறைந்தபட்சம் 75 சதவீதம் வருகைப் பதிவு இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் அங்கீகாரத்துக்கு அனுமதி அளிக்கப்படாது.
இதற்கிடையே, நடப்பாண்டில் தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் தேசிய மருத்துவ ஆணையத்தின் குழு மேற்கொண்ட ஆய்வில், சென்னை மருத்துவக் கல்லூரி தவிர்த்து மற்ற 35 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் குறைந்த வருகைப்பதிவு, அதிலும் ஒரு முறை மட்டும் வருகைப்பதிவு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் இருந்தன. இவற்றைச் சுட்டிக்காட்டி, அதற்கு விளக்கம் அளிக்கும்படி கல்லூரிகளின் நிர்வாகத்துக்கு தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு கல்லூரிகளின் நிர்வாகங்கள் விளக்கமளித்தன.
இதைத்தொடர்ந்து, மருத்துவர்களின் பயோமெட்ரிக்கில் வருகை மற்றும் செல்கை பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் வருகைப் பதிவு விவரங்களை சமர்ப்பிக்குமாறும் தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) செயலர் மருத்துவர் ராகவ் லங்கர் வெளியிட்ட அறிவிப்பில், “மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதிபடுத்தும் நோக்கில் முதுநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், தங்களது ஆண்டறிக்கையை ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் ஆகும். அந்த வகையில் கடந்த 2024 ஜன.1 முதல் டிச.31-ம் தேதி வரையிலான தகவல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதனுடன் ஆணையத்துக்கு செலுத்த வேண்டிய தொகையையும் செலுத்த வேண்டும்.
மேலும், ஆண்டறிக்கைக்கான இணைய படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களுக்கு உரிய விவரங்களை அளிக்க வேண்டும். குறிப்பாக, மருத்துவச் சிகிச்சை மற்றும் ஆய்வு நடவடிக்கைகள், பேராசிரியர் மற்றும் முதுநிலை மருத்துவர்கள் விவரங்கள், அவர்களது வருகைப் பதிவு உள்ளிட்ட தகவல்களை பதிவேற்றுவது அவசியம் ஆகும். ஜூன் 3-ம் தேதி மாலை 6 மணிக்குள் அதனை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.