சென்னை: மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக (டிஎம்இ) இருந்த சங்குமணி கடந்த ஜூன் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். புதிய இயக்குநரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக இருந்த சுகந்தி ராஜகுமாரியை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக நியமித்து சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நேற்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி பொறுப்பேற்றுக் கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு சூரங்குடி கிராமத்தைச் சேர்ந்த சுகந்தி ராஜகுமாரி, கடந்த 36 ஆண்டுகளாக மருத்துவக்கல்வி பணியில் உள்ளார். தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தோல் மருத்துவத் துறையில் பேராசிரியர் மற்றும் துறை தலைவராக பணியாற்றிய அவர், கடந்த 2019-ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பொறுப்பேற்றார்.
பின்னர், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனாக பதவி வகித்தார். மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் கூடுதல் இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது இயக்ககத்தின் இயக்குநராக பொறுப்பேற்ற சுகந்தி ராஜகுமாரிக்கு, சுகாதாரத் துறை அதிகாரிகள், டீன்கள், மருத்துவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
மருத்துவர் சுகந்தி ராஜகுமாரியின் கணவர் ஐசக் மோகன் லால் உச்ச நீதிமன்றம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர். மூத்த மகள் அபிஷா ஐசக் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்கறிஞராகவும் இளைய மகள் அனிஷா ஐசக் கண் மருத்துவராகவும் உள்ளனர்.