மதுரை: பள்ளிகள் தொடங்கியதும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில், எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 16 ஆயிரம் மாணவர்களுக்கு ஜூன் 10-ம் தேதி முதல் பொது மருத்துவம், கண், காது, மூக்கு மற்றும் பல் போன்ற உறுப்புகளுக்கு இலவச உடல் மருத்துவப் பரிசோதனை செய்து, தேவையான மாணவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க மாநகராட்சி ஆணையர் சித்ரா ஏற்பாடு செய்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படுகின்றன. மாநகராட்சி கட்டுப்பாட்டில் 64 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை, மொத்தம் 16,000 மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். பெரும்பாலும் ஏழை மாணவர்கள் படிப்பதால் முறையாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது கடினம்.
அதனால், பள்ளிகள் தொடங்கியதும் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 10-ம் தேதி முதல் பொது மருத்துவம், கண், காது, மூக்கு மற்றும் பல் போன்ற உறுப்புகளுக்கு இலவச பரிசோதனை செய்து சிகிச்சை தேவைப்படும் மாணவர்களுக்கு இலவச சிகிச்சை, உபகரணம், ஆலோசனை வழங்க ஆணையர் சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து மாநகராட்சி கல்விப் பிரிவு அதிகாரிகள் கூறியது: பள்ளிக் குழந்தைகள் பார்வைத் திறன் இல்லாவிட்டால் படிப்பில் பின் தங்குவர். பெரும்பாலும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் கண் பரிசோதனை செய்து கொள்வதில்லை. அவர்களால் சிறந்த முறையில் படிக்க முடியாமல் போகும் வாய்ப்புள்ளது.
அதுபோல், மாணவர்கள் விழிப்புணர்வு இன்றி அதிக அளவு இனிப்பு சாப்பிடுவதோடு சரியாக பல் துலக்காமல் பல் சொத்தை, இடைவெளி, பல் ஓட்டை, பல் வலி போன்ற குறைபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது. சரியாக சாப்பிட முடியாமல், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இப்படி பல்வேறு குறைபாடுகளுடன் பள்ளிக்கு வரும் மாணவர்களை பரிசோதனை செய்து, தேவைப்படுவோருக்கு கண், காது, மூக்கு, பொது மருத்துவம், பல் மருத்துவ சிகிச்சைகளை இலவசமாக வழங்க ஆணையர் சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.
கண் கண்ணாடி, செயற்கை பல் போன்றவை தேவைப்பட்டால் அவற்றையும் இலவமாக வாங்கிக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை, சிஎஸ்ஐ பல் மருத்துவமனை மருத்துவர்கள் அழைக்கப்பட்டு, மாணவர்களுக்கு முதற்கட்டமாக இலவச பரிசோதனை செய்யப்படும். மாநகராட்சி மருத்துவமனைகளிலேயே பொது மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவர்கள் இருப்பதால், அவர்களை கொண்டு மாணவர்களுக்கு பொது மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை வழங்கப்படும். பள்ளிகள் தொடங்கிய பிறகு ஜூன் 10 முதல், ஒவ்வொரு நாளும் ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, சிகிச்சை வழங்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.