மதுரை: பொதுப்பணித் துறை பாலம் கட்டுவதால் ஏற்பட்ட தடையால் மதுரை சிந்தாமணியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் குளம்போலத் தேங்கியது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாமல் சமுதாயக் கூடத்தில் தஞ்சம் அடைந்தனர்.
மதுரை சிந்தாமணி கிழக்கு தெரு, நடுத்தெரு, புதுத்தெரு, கண்ணன் காலனி உள்ளிட்ட பகுதி மக்கள் கிருதுமால் நதி கால்வாயை கடந்து செல்ல ரூ.20 லட்சத்தில் பொதுப் பணித்துறை சார்பில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இக்கால்வாயில் செல்லும் கழிவுநீரை வெளியேற்ற மாற்றுப் பாதை அமைத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கிருதுமால் நதி கால்வாய் மற்றும் கழிவுநீர் செல்லும் மற்றொரு கால்வாயும் அடைபட்டதால் கழிவுநீரானது அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் சிந்தாமணியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தினுள் தேங்கியது. இப்பள்ளியில் 80 மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
இதனிடையே, இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் கழிவுநீர் தேங்கியிருந்ததால் வகுப்பறைக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
மேலும் கடுமையான துர்நாற்றம் வீசியது. பின்னர் மாணவர்களை அருகிலுள்ள சமுதாயக் கூடம் மற்றும் மாரியம்மன் கோயில் முன்பு அமர வைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். இன்று மாலை வரை பள்ளி வளாகத்தில் தேங்கியிருந்த கழிவுநீர் அகற்றப்படவில்லை.