டி.கல்லுப்பட்டி அருகே கரையாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஓர் மாணவர் மட்டுமே படிக்கிறார். அவருக்கு ஓர் ஆசிரியர் பாடம் நடத்துகிறார்.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஒன்றியம் மோதகம் ஊராட்சிக்குட்பட்ட எம்.கரையாம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் ஓக் மாணவர் மட்டுமே உள்ளார். இந்த ஒரே ஒரு மாணவருக்காக ஓர் ஆசிரியர் மாற்றுப் பள்ளியிலிருந்து இடமாறுதலில் வந்துள்ளார்.
கடந்த ஆண்டு இந்த மாணவர் டி.கல்லுப்பட்டியில் உள்ள பள்ளிக்கு படிக்கச் சென்றதால், எம்.கரையாம்பட்டியில் உள்ள பள்ளி மூடப்பட்டது. தற்போது அந்த மாணவர் மீண்டும் கரையாம்பட்டி பள்ளியில் சேர்ந்துள்ளதால் மீண்டும் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பள்ளிக்குச் சென்ற ஆசிரியரும் மீண்டும் பணியிட மாறுதலில் கரையாம்பட்டிக்கு வந்துள்ளார். இந்த ஒரு மாணவருக்கு மதிய உணவு சிட்டுலொட்டிபட்டி பள்ளியிலிருந்து கொண்டு வரப்படுகிறது.
இதேபோல், பேரையூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சியிலுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் படிக்கின்றனர். தெய்வநாயகபுரம், லட்சுமிபுரம், புதூர் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் 5 முதல் 9 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். இவர்களுக்குரிய மதிய உணவு அருகிலுள்ள பள்ளிகளிலிருந்து வரவழைக்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரலிங்காபுரம், பி.அம்மாபட்டி ஆகிய ஊர்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்ததால் பள்ளிகள் மூடப்பட்டன. அதேபோன்ற நிலை தற்போது ஒற்றை இலக்கத்தில் செயல்படும் பள்ளிகளுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து கரையாம்பட்டி கிராமத்தினர் கூறுகையில், தமிழக அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அரசுப் பள்ளிகள் தேர்தல் காலங்களில் வாக்குச்சாவடியாக செயல்படுகிறது. அதற்காக ஒரு சில மாணவர்களை சேர்த்து பள்ளியை மூடவிடாமல் பாதுகாத்து வருகிறோம் என்றனர்.
இது குறித்து திருமங்கலம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கணேசன் கூறுகையில், கரையாம்பட்டி பள்ளியின் நிலை குறித்து தெரியவில்லை, சேடபட்டி பகுதிக்கு ஆய்வுக்கு செல்கிறேன். பள்ளியின் நிலை குறித்து, அங்கு ஆய்வு செய்த பிறகு தெரிவிக்கிறேன் என்றார்.