இந்தியாவின் காலநிலை, மண்வளம், வேளாண்மை, இயற்கைத் தாவரங்கள், உற்பத்தி யாகும் பொருள்கள், கிடைக்கும் தாதுப் பொருட்கள், இந்தியாவில் பாயும் ஆறுகள், அவை உற்பத்தியாகும் இடங்கள், பாயும் மாநிலங்கள் போன்றவை, காடுகள், சரணாலயங்கள், பல்நோக்குத் திட்டங்கள் ஆகியவற்றைப் பற்றியும் பட்டியலிட்டு, குறிப்புகள் எடுத்து, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக வேண்டும்.
இவை தவிர, இந்தியப் புவியியல் பற்றிய சில முக்கியக் குறிப்புகளைத் தெரிந்து கொள்வது நல்லது. ஆசியக் கண்டத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது மிகப் பெரிய நாடான இந்தியாவின் குறுக்கே கடகரேகை (20°30′ வடக்கு அட்சம்) சென்று இந்திய நாட்டைத் தீபகற்ப இந்தியா, புற தீபகற்ப இந்தியா என இரண்டு பகுதி களாகப் பிரிக்கிறது.
இமயமலைத் தொடர் இந்தியாவின் வடக்கு இயற்கை அரணாக உள்ளது. பாக் நீரிணை இலங்கையில் இருந்து இந்தியாவைப் பிரிக்கிறது. வங்காள விரிகுடாவில் அமைந் துள்ள அந்தமான் நிகோபார் தீவுகளின் தென்கோடி முனை ‘இந்திரா’ முனை.
எல்லைகளும் சமவெளிகளும்: இந்தியாவில் உள்ள ஆரவல்லி, உலகின் மிகப் பழமையான மலைத்தொடர். இமய மலை, மடிப்புமலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா, கே2, நங்கபர்வதம், தவளகிரி ஆகியவை அங்குள்ள முக்கியச் சிகரங்கள். உலகின் மிக உயரமான மானா கணவாய் இந்திய-திபெத் எல்லையில் அமைந்துள்ளது.
இந்தியா, சீனா, மயன்மார் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகளும் சந்திக்கும் புள்ளியில் மக்மோகன் எல்லைக் கோட்டில் திபு கணவாய் அமைந் துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானைக் கைபர் கணவாய் இணைக்கிறது. சில முக்கியக் கணவாய்கள் – போலன், சொஜிலா (லடாக்), ஷிப்கிலா (இந்தியா – சீனா எல்லை), நாதுலா (சிக்கிம்), ஜிலாப்புலா (இந்தியா – லாசா இணைப்புச் சாலை) ஆகியவை. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் முக்கியக் கணவாய்கள் தார், போர், பாலக்காட்டுக் கணவாய்கள்.
இந்தியச் சமவெளிகளில் மிகப்பெரி தான கங்கைச் சமவெளி மேற்கிலுள்ள யமுனை ஆற்றிலிருந்து கிழக்கிலுள்ள வங்க
தேசம்வரை பரவியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக் கும் இடைப்பட்ட நிலப்பகுதி மேற்குக் கடற்கரைச் சமவெளி எனவும், கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதி கிழக்குக் கடற்கரைச் சமவெளி எனவும் அழைக்கப்படுகிறது.
பங்கார் எனும் சமவெளி பழைய வண்டல் மண்படிவு. சேறும் சகதியும் கொண்ட நிலப்பகுதி தராய் எனப்படுகிறது. கழிமுகங்கள், தீவு, சதுப்புநிலக் காடுகள், மணல்திட்டுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது சுந்தரவனம். இமயமலையில் உருவாகும் கங்கை, கடலில் கலக்கும் முன் பல கிளைகளாகப் பிரிகிறது.
அவற்றுள் ஒன்றான ஹுக்ளி நதியில்தான் இந்தியாவின் மிக அதிகமான உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து நடைபெறுகிறது. சிந்துவின் துணை நதியான சட்லெஜின் குறுக்கே ஆசியாவிலேயே மிகப் பெரிய அணைக்கட்டான பக்ரா – நங்கல் கட்டப்பட்டுள்ளது. தீபகற்ப இந்தியாவின் ஆறுகள் அனைத்தும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உருவாகின்றன.
தீபகற்ப ஆறுகளில் மிக நீளமான ஆறு கோதாவரி. தெலங்கானா பீடபூமியில் ஓடும் ஆறுகள் கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு ஆகியவை. காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தின் குடகு மலையில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டைக் கடந்து, கிழக்கில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. தீபகற்ப இந்தியாவில் மேற்கு நோக்கிப் பாயும் ஆறுகள் நர்மதை, தப்தி.
– கட்டுரையாளர், போட்டித் தேர்வு பயிற்சியாளர், குளோபல் விக்கிமாஸ்டர்; success.gg@gmail.com