சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான துணைக் கலந்தாய்வு ஓரிருநாட்கள் தள்ளிப்போக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 423 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 87,227 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்புப் பிரிவு மற்றும் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வில் 1.48 லட்சம் இடங்கள் நிரம்பியுள்ளன. எஞ்சியுள்ள சுமார் 40 ஆயிரம் இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ல் நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு முடிந்துவிட்ட நிலையில் துணைக் கலந்தாய்வில் பங்கேற்க 15 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தற்போது மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்ததாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் துணைக் கலந்தாய்வு ஓரிரு நாட்கள் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும், இந்தாண்டு சுமார் 25 ஆயிரம் இடங்கள் காலியாகக்கூடும் எனவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.