பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கு மாணவர்கள் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேர இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரம் பேரும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் சேர 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் ஆன்லைனில் விண்ணப்பித் துள்ளனர்.
பிஇ, பிடெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 18-வது நாளான நேற்று மாலை 6.60 மணி நிலவரப்படி 2 லட்சத்து 40,754 பேர் ஆன்லைனில் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 73,005 பேர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 1 லட்சத்து 30,262 பேர் தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்ப பதிவை முழுமை செய்துவிட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 6ம் தேதி கடைசி நாள் ஆகும். பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூன் 6ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பொறியியல் படிப்பில் மட்டுமின்றி கலை அறிவியல் படிப்புகளிலும் மாணவர்கள் ஆர்வத்தோடு விண்ணப்பித்து வருகின்றனர்.
இதன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் என்ற இணையதளத்தை பயன்படுத்தி மே 27ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.