சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வின் 3-வது சுற்றில் 64,629 மாணவர்களுக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 423 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் 2 சுற்று கலந்தாய்வு முடிவில் 92,423 இடங்கள் நிரம்பியுள்ளன.
மீதமுள்ள 92,605 இடங்களுக்கான 3-ம் சுற்று கலந்தாய்வு ஆக. 7-ம் தேதி தொடங்கியது. அதில் கலந்தாய்வில் பங்கேற்று, தங்களுக்கு பிடித்தமான கல்லூரிகளை தேர்வு செய்த 62,533 மாணவர்களுக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளி மாணவருக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 2,096 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் அதை இன்று மாலை 5 மணிக்குள் கட்டாயம் உறுதிசெய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
இறுதி ஒதுக்கீட்டு ஆணை நாளை (ஆக.12) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். அதை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து ஆக. 17-ம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளில் சேர வேண்டும். ‘அப்வேர்டு’ (upward) அளித்த மாணவர்களுக்கு ஆக. 20-ம் தேதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும். அன்றுடன் பொது கலந்தாய்வு நிறைவு பெறுகிறது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை எனும் தளத்தில் அறியலாம்.
இதற்கிடையே, பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு மற்றும் பொதுப் பிரிவு கலந்தாய்வு இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், மொத்தம் உள்ள 1.87 லட்சம் இடங்களில் சுமார் 1.58 லட்சம் இடங்கள் நிரம்பியுள்ளன. சுமார் 29 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. துணை கலந்தாய்வு மூலம் இந்த இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.