சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு முடிவில் 37,179 இடங்கள் காலியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 423 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு ஒரு லட்சத்து 90,624 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் மீதமுள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான துணை கலந்தாய்வு ஆக. 21-ம் தேதி தொடங்கியது.
இதில் பங்கேற்க 20,662 மாணவர்கள் தகுதிபெற்றனர். அவர்களில், விருப்பக் கல்லூரியை தேர்வு செய்தவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, பொதுப் பிரிவில் 7,767 பேர், தொழிற்கல்வி பொதுப் பிரிவில் 165 பேர், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 32 பேர் என 7,964 பேருக்கு துணை கலந்தாய்வில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பொறியியல் கலந்தாய்வு: இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக ஒரு லட்சத்து 53,445 இடங்கள் நிரம்பியுள்ளன. இன்னும் 37,179 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், எஸ்சி, எஸ்டி பிரிவுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.
மாணவர்கள் மாலை 7 மணி வரை தங்களுக்கான விருப்பக் கல்லூரியை தேர்வு செய்யலாம். அவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு நாளை (ஆக.26) வெளியிடப்படும். அதை உறுதி செய்பவர்களுக்கு 27-ம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.