தற்போதைய சூழலில் நிலையான ஒரு வேலையில் சேர முதுநிலைப் பட்டப் படிப்பைப் படிக்க வேண்டியது அவசியமா? – த.சக்திவேல், கிருஷ்ணகிரி
நிலையான வேலை என்பது குறித்து இருவிதமான பார்வைகள் உள்ளன. ஒன்று அரசுப் பணிகள் (மாநில, மத்திய அரசுகள், அவற்றைச் சார்ந்த நிறுவனங்கள்) அல்லது இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள், வங்கிப் பணிகள் சார்ந்தும் சில உள்ளன. இன்னொன்று தனியார் துறைப் பணிகள். மாநில அரசைப் பொறுத்தவரை குரூப் 4, 3, 2, 1 மற்றும் இதர குரூப்களுக்கு 10ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்புவரை கல்வித்தகுதி பொருந்தும்.
அது போலவே மத்திய அரசுப் பணிகளின் பல நிலைகளுக்கு எஸ்.எஸ்.சி. முதல் யு.பி.எஸ்.சி. வரையிலும் மத்திய காவல் பணிகளுக்கு பிளஸ் டூ முதல் அதிகபட்சமாகப் பட்டப் படிப்பு போதும் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகள் உள்பட). மத்திய அரசு சார்ந்த நிறுவனங்களில் தொழில்நுட்பப் பணிகள் கேட் (GATE) தேர்வின் மதிப்பெண்கள் அடிப்படையிலும் நிரப்பப்படுகின்றன. ஆராய்ச்சிப் பணிகளுக்கும் அணுசக்தி ஆராய்ச்சி நிலையங்களில் பயிற்சிநிலைப் பணியாளர்களுக்கும் அறிவியலில் முதுநிலைப் படிப்பு தேவை.
இந்தியாவின் முன்னணிப் பன்னாட்டு நிறுவனங்களில் அலுவலர் நிலைப் பணிகளுக்கு மேலாண்மை கல்வி நிறுவனங்களின் எம்.பி.ஏ. போன்ற படிப்புகள் அத்தியாவசியம் அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் வளாகத் தேர்வு முறையில் வெற்றி பெறத் தேவையான திறன்களைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
எனவே, இன்றைய நிலையில் உங்களின் இலக்கு, பார்வையைப் பொறுத்துப் பாதையைத் தேர்ந்தெடுங்கள். அதனுடன் தலைமைப் பண்பு, கூர்நோக்கும் திறன், அணுகுமுறை, மற்றவர்களுடனான தொடர்புகொள்ளும் திறன் ஆகியவை அத்தியாவசியம். பார்வையில் தெளிவு, முடிவான இலக்கு, விடாமுயற்சி ஆகியவை இருந்தால் பயணம் செம்மையாகும்.
நான் இந்த ஆண்டு எம்.ஏ. எகனாமிக்ஸ்முடிக்கப் போகிறேன். என் நண்பர் அடுத்து எம்.பி.ஏ. சேர உள்ளார். நானும் எம்.பி.ஏ.
படித்தால் வேலை கிடைக்குமா அல்லது எம்.ஏ. எகனாமிக்ஸுக்கே வேலை கிடைக்குமா? – வி.அருண்குமார், அருப்புக்கோட்டை
நீங்கள் படித்த பாடப்பிரிவின் அடிப்படையில் வேலை வேண்டு மானால் வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளன. முதுநிலைப் படிப்பை முடித்த பின்னர் ரிசர்வ் வங்கியின் அலுவலர் பணியிடத்துக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது இந்தியன் எகனாமிக்ஸ் சர்வீசஸ் பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வைப் போன்று மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிறது.
தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் உயர் பதவிகளில் பணிபுரியலாம். அல்லது பி.எட். முடித்துவிட்டு பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றலாம். அல்லது நெட் / ஸ்லெட் தேர்வை எழுதிக் கல்லூரிகளில் விரிவுரையாளராகச் செல்லலாம். ஆர்வம் இருந்தால் பொருளாதாரத்தில் ஆராய்ச்சிப் படிப்பைத் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் (டில்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், சென்னை எம்.ஐ.டி.எஸ்.) மேற்கொள்ளலாம்.
எம்.பி.ஏவைப் பொறுத்தவரை பெரிய நிறுவனங்களில் மேலாண்மைப் பொறுப்புகளில் பணிபுரிவதை நீங்கள் இலக்காகக் கொண்டிருந்தால் படிக்கலாம். ஆனால், நாட்டின் தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் இதைப் படித்தால் மட்டுமே வளாக வேலைவாய்ப்பைப் பெற இயலும். இல்லையென்றால், பெயரின் பின்னால் போட்டுக்கொள்ள மட்டுமே பட்டம் பயன்பெறும்.
இதற்கு என உள்ள நுழைவுத் தேர்வுகளான கேட், மேட், எஸ்டாட், சிமேட், ஸ்னாப், என்மேட், மாநிலத்தைப் பொறுத்தவரை டான்செட்; இவை தவிரவும் ஏராளமான நுழைவுத்தேர்வுகள் (சுமார் 40க்கும் மேற்பட்டவை) அந்தந்தக் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. எனவே, முதலில் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, பின்னர் கவனம் சிதறாமல் அதை நோக்கிப் பயணப்படுங்கள்.