புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மாதிரிப் பள்ளியில் படித்த அனைத்து மாணவ, மாணவிகளும் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதுடன், உயர்கல்வி நுழைவுத் தேர்விலும் சாதனை படைத்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டு களில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு ஏதுவாக தமிழகம் முழுவதும் 40 மாதிரிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. விடுதி வசதியுடன் செயல்பட்டு வரும் இப்பள்ளிகளில் பாடத்துக்கு தலா 2 அல்லது 3 ஆசிரியர்கள் வீதம் கற்பிக்கின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பிறகு மாணவர்கள் நுழைவுத் தேர் வின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு கல்வி நிலையங் களில் உயர்கல்வியில் சேர்க்கப்படுகின்றனர். மாதிரிப் பள்ளிகள் இப்பள்ளியில் படிப்போருக்கு, உயர்கல்வி யும்,வேலைவாய்ப்பும் உத்தரவாதம் எனும் இலக்குடன் செயல்படுத்தப் பட்டு வருகின்றன.
அதன்படி, புதுக்கோட்டை கைக் குறிச்சியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் நிகழாண்டு முதல் முறையாக பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். அதில், அனைவரும் தேர்ச்சி பெற்றதுடன், அதிக மதிப்பெண்களையும் பெற்றனர். இதேபோல, 10-ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய 3 பொதுத் தேர்வுகளிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
இது குறித்து கல்வித் துறை அலுவலர் கூறியது: இப்பள்ளியில் முதல்முறையாக நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை தேர்வு எழுதிய 116 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதேபோல, பிளஸ் 1 தேர்வு எழுதிய 146 பேரும், எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய 109 பேரும் தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 தேர்வில் 550 மதிப் பெண்ணுக் கும் மேல் 44 பேரும், பிளஸ் 1 தேர்வில் 500-க்கும் மேல் 97 பேரும். எஸ்எஸ்எல்சி தேர்வில் 450-க்கும் மேல் 71 பேரும் பெற்றுள்ளனர்.
மேலும், பிளஸ் 2 தேர்வுக்குப் பிறகு உயர்வு கல்வி பயில்வதற்கு பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுதிய 36 பேரில், 20 பேருக்கு தலை சிறந்த கல்வி நிறுவனங்களில் சேர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.