புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலான நாக் கமிட்டியின் ஏ பிளஸ் (A+) அங்கீகாரம் கிடைத்துள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் கடந்த 1985-ல் நிறுவப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நாக் கமிட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தது. தொடர்ந்து புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ‘ஏ’ கிரேடு தர அங்கீகாரம் நாக் கமிட்டி வழங்கியது. மீண்டும் நாக் கமிட்டியின் அங்கீகாரம் பெற புதுச்சேரி பல்கலைக்கழகம் விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த 28, 29, 30 ஆகிய தேதிகளில் நாக் கமிட்டி ஆய்வு செய்தது.
புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பிரகாஷ்பாபு , கல்வித் திட்டங்கள், உட்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்களை நாக் குழுவினருக்கு படக்காட்சிகளுடன் எடுத்துரைத்தார். இந்த முறையில் நாக் கமிட்டியினர் ஆன்லைன் மற்றும் நேரில் என இரண்டு வழிமுறைகளில் இந்த ஆய்வை நடத்தி சென்றனர். இந்நிலையில், நாக் கமிட்டியின் ‘ஏ பிளஸ்’ அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் பிரகாஷ்பாபு அனைத்து இயக்குநர்கள், டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அனைத்து துறையினருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், “புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் (NAAC) 5-வது மதிப்பீட்டில் ‘ஏ பிளஸ்’ தரத்துடன் அங்கீகாரம் பெற்றுள்ளது.
இதை அனைவருக்கும் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். கல்வி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் முழுமையான வளர்ச்சியில் சிறந்து விளங்குதல், கல்வி மற்றும் நிர்வாக சமூகத்தின் கூட்டு முயற்சிகள், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு இந்த அங்கீகாரம் ஒரு சான்று” என்று குறிப்பிட்டுள்ளார்.