சென்னை: தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பள்ளிகளில் விநியோகிக்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு மே 8-ம் தேதி வெளியானது. தேர்வை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 மாணவ-மாணவிகள் எழுதிய நிலையில் அவர்களில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி பெற்றனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் உயர்கல்வி சேர்கைக்கு உடனடியாக விண்ணப்பிக்கும் வகையில் மே 12-ம் தேதி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பள்ளியிலும் காலை 11 மணியளவில் தலைமை ஆசிரியர்கள் அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து பள்ளியின் அடையாள குறியீடு (சீல்) வைத்து தங்களின் கையெழுத்திட்டு மாணவர்களுக்கு வழங்கினர்.
இதனால், சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதி மேல்நிலைப்பள்ளிகளில் நேற்று மாணவ, மாணவிகள் கூட்டம் அலைமோதியது.