சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. தேர்வு எழுதிய 7.92 லட்சம் மாணவ, மாணவிகளில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 436 அரசுப் பள்ளிகள் உட்பட 2,638 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு 3,316 மையங்களில் கடந்த மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. 8.02 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகள் பதிவு செய்த நிலையில், 7.92 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 10,049 பேர் (1.25%) தேர்வில் பங்கேற்கவில்லை.
மாநிலம் முழுவதும் 83 முகாம்களில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த ஏப்ரல் 4-ல் தொடங்கி 17-ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து, இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளும் முடிக்கப்பட்டன. தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், ஒருநாள் முன்னதாக வெளியாகும் என மாற்றி அறிவிக்கப்பட்டது.
அதன்படி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டார். தொடர்ந்து, தேர்வுத் துறை இணையதளத்திலும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவும், பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டன.
அதன்படி, பிளஸ் 2 தேர்வு எழுதியதில் 7.53 லட்சம் பேர் (95.03%) தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட (94.56%) இது 0.47 சதவீதம் அதிகம். மாணவிகள் 96.70 சதவீதமும், மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும் தேர்ச்சி விகிதத்தில் மாணவர்களைவிட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகம். தேர்ச்சி விகிதத்தில் கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மாணவிகளே முன்னிலை வகித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் முதல் இடம்: மாவட்ட அளவிலான தேர்ச்சியில் 98.82 சதவீதத்துடன் அரியலூர் முதல் இடம் பெற்றுள்ளது. ஈரோடு (97.98%), திருப்பூர் (97.53%) அடுத்த 2 இடங்களில் உள்ளன. கடைசி இடத்தில் வேலூர் (90.79%) உள்ளது. தலைநகரான சென்னை 94.44 சதவீதம் பெற்றுள்ளது.
அரசுப் பள்ளிகள் பிரிவிலும் அரியலூர் மாவட்டம் (98.32%) முதல் இடமும், ஈரோடு (96.88%), திருப்பூர் (95.64%) அதற்கடுத்த 2 இடங்களையும் பிடித்துள்ளன. திருவள்ளூர் மாவட்டம் (86.25%) கடைசி இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் 7,513 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 436 அரசுப் பள்ளிகள் உட்பட 2,638 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. கடந்த 2024-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2,478 ஆக இருந்தது.
16,904 தனி தேர்வர்களில் 5,500 பேர் மட்டுமே (32.54) தேர்ச்சி பெற்றனர். 8,019 மாற்றுத் திறன் மாணவர்களில் 7,466 (93.10%) பேரும், 140 கைதிகளில் 130 பேரும் (92.86%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 12-ம் தேதி தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) வெளியிடப்பட உள்ளது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனி தேர்வர்கள் தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம். அசல் மதிப்பெண் சான்றிதழ் ஜூன் மாதம் வழங்கப்படும். மாணவர்கள் விடைத்தாள் நகல் கோரி மே 13 முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
ஜூன் 25-ல் துணை தேர்வு: தேர்வு எழுத விண்ணப்பித்தும், பல்வேறு காரணங்களால் 10,049 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. அவ்வாறு தேர்வு எழுதாதவர்களும், பொதுத் தேர்வில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்களும் இந்த கல்வி ஆண்டிலேயே உயர்கல்வியை தொடர ஏதுவாக, ஜூன் 25-ம் தேதி முதல் துணை தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் மே 14 முதல் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்ச்சி விவரம்
- 2018 – 91.10%
- 2019 – 91.30%
- 2020 – 92.34%
- 2021 – 100%
- 2022 – 93.76%
- 2023 – 94.03%
- 2024 – 94.56%
- 2025 – 95.03%