புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி விழுக்காடு 98.5 சதவீதமாகும். இம்முறை அரசுப் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாற்றப்பட்டதால் தனியார் பள்ளிகள் மட்டுமே இத்தேர்வை எழுதின.
புதுச்சேரி, காரைக்காலில் இதுவரை தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வந்தனர். இம்முறை அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு மாறிவிட்டன. தனியார் பள்ளிகள் மட்டுமே தமிழக அரசு பாடத்திட்டத்தை கடைபிடிக்கின்றன. கடந்த மார்ச் 2025-ல் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்த 3,881 மாணவர்களும் 3,683 மாணவிகளும் என மொத்தம் 7,564 மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இன்று வெளியான தேர்வு முடிவுகளின் படி தனியார் பள்ளிகளில் பயின்ற 7,453 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3,794 மாணவர்களும் 3,659 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் சதவீதம் 98.5 ஆகும். இதில் புதுச்சேரியில் 98.5 சதவீதமாகவும், காரைக்காலில் 98.1 சதவீதமாகவும் தேர்ச்சி விகிதம் உள்ளது.
புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 101 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 63 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. பல்வேறு பாடங்களிலும் 100% சதவீதம் மதிப்பெண்களை 582 பேர் எடுத்துள்ளனர். இதில் கணினி அறிவியலில் அதிகளவாக 253 பேரும், கணிப்பொறி பயன்பாட்டில் 122 பேரும், பிரெஞ்சில் 75 பேரும் நூறு சதவீத மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.