சென்னை: பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை இன்று (மே 7) காலை 9 மணிக்கு வெளியிடுகிறது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தேர்வெழுத 8 லட்சத்து 2,568 பள்ளி மாணவர்கள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறை கைதிகள் என ஒட்டுமொத்தமாக 8.21 லட்சம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். அவர்களில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் மட்டுமே தேர்வில் கலந்து கொண்டனர்.
இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் 83 முகாம்களில் ஏப்ரல் 4-ல் தொடங்கி 17-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. மேலும், இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட இதர பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன.
இதற்கிடையே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால் ஒருநாள் முன்னதாக தேர்வு முடிவுகள் இன்று (மே 7) வெளியிடப்பட உள்ளது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் காலை 9.30 மணிக்கு முடிவுகளை வெளியிடுகிறார்.
இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்.
இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும். அதேபோல், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் வலைத்தளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான முன்னேற்பாடுகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.