சென்னை: நடப்பாண்டு பிளஸ்-2 பொதுத் தேர்வை தமிழக சிறைகளில் உள்ள 2 பெண் கைதிகள் உட்பட 130 கைதிகள் எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10 கைதிகள் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. புழல் சிறையில் தேர்வு எழுதிய 21 பேரில் 18 பேரும், புழல் மத்திய சிறையில் தேர்வு எழுதிய 4 பேரில் 2 பேரும், வேலூர் மத்திய சிறையில் தேர்வு எழுதிய 9 பேரில் 5 பேரும், கடலூர் மத்திய சிறையில் தேர்வு எழுதிய 7 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதேபோல கோவையில் 20, சேலத்தில் 8, திருச்சியில் 22, மதுரையில் தேர்வு எழுதிய 30 பேரில் 29 பேரும், பாளையங்கோட்டையில் 7 பேரும், மதுரை மற்றும் திருச்சி பெண்கள் தனிச்சிறையில் தலா ஒருவரும் தேர்ச்சி பெற்றனர்.
பாளையங்கோட்டை மத்திய சிறை கைதி மீனாட்சி சுந்தரம் 524 மதிப்பெண்களும், அதே சிறைக் கைதி வைத்திலிங்கம் 517 மதிப்பெண்களும், சேலம் மத்திய சிறைக் கைதி கனிவளவன் 511 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். இவர்களுக்கு தமிழக சிறைத்துறை கூடுதல் டிஜிபி மகேஷ்வர் தயாள், சிறைத்துறை தலைமையிட ஐஜி கனகராஜ் வாழ்த்து தெரிவித்தனர்.