சென்னை: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்படவுள்ள தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் கனகலட்சுமிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவு விவரம்: சென்னை ஷெனாய் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தமிழ் ஆசிரியை கனகலட்சுமி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்படவுள்ளார். ஆசிரியர் கனகலட்சுமி ‘தமிழ் வாசிப்புத் திறனில் ஏற்படும் சிக்கல்களும் தீர்வுகளும்’ எனும் தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.
தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் மாணவர்கள் எளிய முறையில் தமிழ் கற்பதற்கான வழிமுறையையும் உருவாக்கியுள்ளார். மேலும் தமிழ் பணியை தொண்டாகக் கருதி பணியாற்றி வருகிறார். இந்தப் பணியை பாராட்டி கிராய்டன் தமிழ் சங்கம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இவரை கவுரவிக்கவுள்ளது.
தொடர்ந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவிலும் பங்கேற்கிறார். தமிழால் உயர்ந்துள்ள ஆசிரியர் கனகலட்சுமிக்கு தமிழனாக மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.