சென்னை: அரசு கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவி்ததுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நடப்பு கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. இதற்கான கடைசி நாள் ஜூலை 9 (நேற்று) முடிவடைந்தது.
இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி பிஎட் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூலை 21 வரை நீட்டிக்கப்படுகிறது. எனவே, பிஎட் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி வருகிற 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூலை 31-ம் தேதி வெளியிடப்படும். விரும்பும் கல்லூரியை தேர்வுசெய்வதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும். கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை ஆகஸ்ட் 13-ம் தேதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
மாணவர்கள் தங்களுக்கான கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை www.iwiase.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஆகஸ்ட் 20-ம் தேதி தொடங்கும். இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.