சென்னை: அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் வகையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் பாடத்திட்ட மேம்பாட்டு மையம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
அதன்படி, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி முதலாண்டு மாணவர்கள் கூகுள் ஜெமினி ஏஐ சேவையை ஓராண்டு காலம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். தவிர, ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படை அம்சங்கள், ஏஐ பயன்பாடுகள், அதன் மேம்பட்ட வழிமுறைகளையும் அறிந்துகொள்ளலாம். ஏஐ தொடர்பான பாடங்கள், முக்கிய தகவல்களையும் மாணவர்களுக்கு கூகுள் நிறுவனம் அனுப்பும். இதில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் goo.gle/geminifortn என்ற இணையதள இணைப்பில் செப்.15-க்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.