சென்னை: தமிழகத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும் களப்பணி மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழகத்தில் பள்ளி செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பள்ளியில் சேரும் அனைத்து குழந்தைகளும் இடைநிற்றல் இல்லாமல் கல்வி பயில வேண்டும். குழந்தைகளை தக்க வைத்து இடைநிற்றல் பூஜ்ஜியம் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பதே இந்த செயல்பாட்டின் நோக்கமாகும். அந்த வகையில் 2025-26ம் கல்வியாண்டுக்கான பள்ளி செல்லாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகளை அடையாளம் காண்பதற்கான கணக்கெடுப்பு பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடங்கவுள்ளது.
இந்த கணக்கெடுப்பு பணியில் மண்டல மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபடவுள்ளனர்.
இந்த களப்பணியின்போது பள்ளி செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அதற்கான காரணம் பதிவு செய்யப்பட வேண்டும். அதன்பின் அவர்களை அருகே உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கவும், இது சார்ந்து பெற்றோர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர இந்தக் களப்பணி தொடர்பாக ஒவ்வொரு கட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடுகள், செயலியில் பதிவேற்றம் செய்தல், மாணவர்களின் வருகைப் பதிவு குறித்து ஆய்வு செய்தல் உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.