மஞ்சூர்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை வெகுவாக குறைந்துவரும் நிலையில், சேர்க்கையை அதிகரிக்கும் விதமாக அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மஞ்சூர் அருகில் உள்ள கீளூர் கோக்கலாடா அரசு உயர்நிலைப்பள்ளியில் சேரும் 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய இருப்பதாக கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டு மாணவர் சேர்க்கையில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டம் குறித்து கிராம மக்கள் கூறும் போது, ‘மாணவர் சேர்க்கை குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளி மூடப்பட்டது.
இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும்ஊர் பொதுமக்களின் தொடர் முயற்சியால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இந்த பள்ளி திறக்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் 42 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரத்தை டெபாசிட் செய்ய இருக்கிறோம். 10-ம் வகுப்பை முடித்து செல்லும்போது முதிர்வுத் தொகையுடன் மொத்த பணத்தையும் பெற்றுக் கொண்டு உயர் கல்விக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
1-ம் வகுப்பு மட்டுமின்றி 6-ம் வகுப்பு வரை தற்போது புதிதாக சேரும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும். 7, 8, 9, 10 என ஒவ்வொரு வகுப்பில் சேரும் மாணவர்களுக்கும் குறிப்பிட்ட தொகை டெபாசிட் செய்யப்படும்’ என்றனர்.