பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் தொகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்களுக்கு மைதானத்திலும், மரத்தடியிலும் வகுப்பறைகள் நடத்தப்படுகின்றன.
திருச்சி மாவட்டம் காட்டூர் பாப்பாக் குறிச்சியில் ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. 600 மாணவர்கள் பயின்று வரும் இப்பள்ளி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அமைந்துள்ளது.
கூடுதல் வகுப்பறை கட்டும் பணி தொய்வாக நடைபெறுவதால், பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாமல், மாணவர்கள் மைதானத்திலும், மரத்தடியிலும் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். தற்போது ஆடிக் காற்றில் பறக்கும் குப்பை, தூசியை எதிர்கொண்டு மிகுந்த சிரமத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.
இது குறித்து அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.ரகமதுல்லா, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: காட்டூர் பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நலத் துறை மேல்நிலைப் பள்ளி, இப்பகுதியில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்கு வரப்பிரசாதம். இங்கு போதிய வகுப்பறை இல்லாததால், மாணவர்கள் மரத்தடியிலோ, மைதானத்திலோ அமர்ந்து காற்று, வெயில், மழை என பல்வேறு காலநிலைகளை எதிர்கொண்டு கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது. மாணவர்களின் வசதிக்காக கட்டப்படும் கூடுதல் வகுப்பறைகளின் கட்டுமானப் பணிகள் இன்னம் நிறைவடையவில்லை. அந்த வகுப்பறைகளும் சிறிதாக உள்ளன.
இதேபோல, பள்ளியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு கருவி, பல மாதங்களாக பழுதடைந்து கிடக்கிறது. இதனால், மாணவர்கள் சுத்திகரிக்கப்படாத நீரை குடித்து வருகின்றனர். மாணவர்களுக்கு கழிப்பிட வசதியும் போதவில்லை. எனவே, கூடுதல் கழிப்பிடங்கள் கட்டித் தர வேண்டும். துப்புரவு பணியாளர்கள் 2 பேரை நியமிக்க வேண்டும். பள்ளியின் சுற்றுச்சுவர் குறைவாக இருப்பதால் சமூக விரோதிகள் தங்கள் அநாகரிக செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். எனவே, இப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மழைக் காலத்துக்குள் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், சுற்றுச் சுவரை உயரமாக கட்டித் தரவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், போதிய கழிப்பிட வசதிகளை விரைந்து செய்து கொடுக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கூறியது: ரூ.1.40 கோடி மதிப்பில் 2,800 சதுர அடி பரப்பளவில் தரை தளம், முதல் தளத்துடன் கூடிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஒரு கணிணி ஆய்வகம், 6 வகுப்பறைகள் கொண்ட இக்கட்டிடம் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் மாணவர்களின் பயன்பாட்டுக்கு வந்துவிடும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் அரசு பொதுத் தேர்வு நடைபெற்றதால் கட்டுமானப் பணி நடைபெறவில்லை. இதனால் கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது. இதர அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து உரிய முறையில் செய்து தரப்படும் என்றனர்.