சென்னை: பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர்கள், அலுவலர்கள் காலிப் பணியிடங்கள் அதிகரித்து வரும் சூழலில், பதவி உயர்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 52 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த 2.2 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதற்கிடையே பணி ஓய்வு உட்பட பல்வேறு காரணங்களால் மாநிலம் முழுவதும் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இவற்றில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்து கற்றல், கற்பித்தல் பணிகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது. இதேபோல், முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர் பதவியிலும் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன்படி மொத்தமுள்ள 38 முதன்மைக் கல்வி அலுவலர் பணிகளில் (வருவாய் மாவட்ட அளவில்) 15 இடங்களும், 154 மாவட்டக் கல்வி அலுவலர்களில் 29 பணியிடங்களும் காலியாக உள்ளன.
தற்போதைய காலிப் பணியிடங்களுக்கு பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும், அலுவலக நிர்வாகப் பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் சுணக்க நிலையிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிகளில் உள்ள காலியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “பதவி உயர்வு மற்றும் நேரடி பணிநியமனம் மூலமாக ஆசிரியர், அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்தவாரம் 2,346 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியாணை வழங்கப்பட இருக்கிறது. தொடர்ந்து போட்டித் தேர்வில் தகுதிபெற்ற 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணி வழங்கப்பட உள்ளது. மேலும், முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர் காலியிடங்களை பதவி உயர்வு மூலம் விரைவில் நிரப்படவுள்ளன.” என்றனர்.