மருத்துவத் தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்க முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனம் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பெங்களூருவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் மென்டல் ஹெல்த் அண்ட் நியூரோசயின்ஸ் (NIMHANS) கல்வி நிறுவனத்திலும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசு, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் மருத்துவத் தொழில்நுட்பப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.
விழிஒளி பரிசோதகர் (ஆப்டோமெட்ரி) படிப்பு: கண்களில் ஏற்படும் நோய்களைக் கண்டறிந்து, தேவைப்படுபவர்களுக்குக் கண் அறுவை சிகிச்சை செய்வது உள்ளிட்ட கண் மருத்துவ சிகிச்சைகளைச் செய்வதற்கு ‘ஆப்தல்மால ஜிஸ்ட்’ என்கிற கண் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்காக அவர்கள் மருத்துவப் பட்டப் படிப்புக்குப் பிறகு கண் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பார்கள்.
கிட்டப் பார்வை, தூரப்பார்வை உடையவர்கள் என்ன மாதிரியான கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பது உள்பட கண் தொடர்பான பிரச்சினைகளுக்கு கண் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன் அனைத்துப் பரிசோதனை களையும் செய்து, அதன் முடிவுகளைத் தருபவர்கள் விழிஒளி பரிசோதர்கள் எனப்படும் ‘ஆப்டோ மெட்ரிஸ்ட்’கள்.
இதற்கான பி.ஓபிடிஎம் (B.OPTOM) என்கிற மூன்று ஆண்டு ஆப்டோமெட்ரி பட்டப்படிப்பில் (அத்துடன் ஓராண்டு நேர்முகப் பயிற்சி) பிளஸ் டூ வகுப்பில் ஆங்கிலப் பாடத்துடன் இயற்பியல், வேதி யியல், உயிரியல் பாடப்பிரிவுகளைப் படித்திருக்க வேண்டும்.
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங் கியல் பாடப்பிரிவுகளையோ, இயற் பியல், வேதியியல், கணிதவியல் பாடப்பிரிவுகளையோ படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம்.
ஆப்டோமெட்ரி அசிஸ்டெண்ட் இரண்டு ஆண்டு டிப்ளமோ படித்தவர்கள் ஆப்டோமெட்ரி பட்டப் படிப்பில் மூன்றாம் ஆண்டில் நேரடியாகச் சேரலாம். ஆப்டோமெட்ரியில் முதுநிலைப் பட்டப் படிப்பும் படிக்க வாய்ப்பு உள்ளது. ஆப்டோமெட்ரி படித்தவர்கள் கண் மருத்துவமனைகளிலும் கண் கண்ணாடி நிறுவனங்களிலும் வேலைக்குச் சேரலாம்.
ரேடியோகிராபி: உடலின் உள்புறம் உள்ளஉறுப்புகளில் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிவதற்கான எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், ஆஞ்சியோகிராம் போன்ற சோதனைகளை்ச் செய்வதற்கான நவீன மருத்துவத் தொழில் நுட்பங்களைக் கற்றுத்தருவதற்கான படிப்புகள் உள்ளன.
ரேடியாலஜி அண்ட் இமேஜிங் டெக்னாலஜி, ரேடியோதெரபி டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் மூன்று ஆண்டு (அத்துடன் ஓராண்டு நேர்முகப் பயிற்சி) பிஎஸ்சி படிப்பைப் படிக்கலாம். இப்படிப்பைப் படித்தவர்களுக்கு மருத்துவமனைகளிலும் மருத்துவ சோதனை மையங்களிலும் வேலை கிடைக்கும்.
மெடிக்கல் லேப் டெக்னாலஜி: ஒருவருக்கு நோய் இருப்பதைக் கண்டறிய மருத்துவர் சொல்லும் சோதனைகளைச் செய்ய வேண்டியதுதான் மெடிக்கல் லேப் டெக்னலா ஜிஸ்ட்களின் பணி. இதற்காக மெடிக்கல் லேபரட்டரி டெக்னலாஜி என்கிற பாடப்பிரிவில் மூன்று ஆண்டு பிஎஸ்சி (அத்துடன் ஓராண்டு நேர்முகப் பயிற்சியும் உண்டு) படிக்கலாம். மருத்துவமனைகள், ரத்த வங்கிகள், ஆய்வு மையங்கள், மருத்துவ ஆய்வகங்களில் பயன்படுத்தப்படும் கருவிகளைத் தயாரிக்கும் தொழிற் சாலைகளிலும் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
குறுகிய காலப் படிப்புகள்: தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளி லும் கிண்டி கிங் இன்ஸ்டி டியூட்டிலும் மருத்துவத் தொழில்நுட்பச் சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர் கள் சேரலாம். இங்குள்ள படிப்புகள் விவரம்:
ஓராண்டுப் படிப்புகள்: கார்டியோ சோனோகிராபி டெக்னிஷியன், இசிஜி, டிரெட்மில் டெக்னிஷியன், பம்ப் டெக்னிஷியன், கார்டியாக் கத்தீட்டரைசேஷன் எல்.டி., எமர்ஜென்சி கேட் டெக்னிஷியன், ரெஸ்பிரேட்டரி டெக்னிஷியன், டயாலிசிஸ் டெக்னிஷியன், அனஸ்தீசியா டெக்னிஷியன், தியேட்டர் டெக்னிஷியன், ஆர்த்தோபெடிக் டெக்னிஷியன், சர்டிபைட் இன் ரேடியாலஜிக்கல் அசிஸ்டென்ட் (எக்ஸ்-ரே), ஆடியோமெட்ரி, ஹியரிங் லாங்க்வேஜ் அண்ட் ஸ்பீச், கிளினிக்கல் தெரபியூடிக் நியூட்ரிஷன் அண்ட் ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மென்ட், இ.இ.ஜி. – இ.எம்.ஜி., நர்சிங் அசிஸ்டென்ட்.
இரண்டு ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: டென்டல் மெக்கானிக், டென்டல் ஹைஜெனிஸ்ட், மெடிக்கல் ரெக்கார்டு டெக்னிசியன், மெடிக்கல் லேப் டெக்னாலஜி, ரேடியாலஜிக்கல் டெக்னாலஜி, ஆப்டோமெட்ரி.
ஆறு மாதப் படிப்பு: மெடிக்கல் ரெக்கார்டு சயின்ஸ்.
மேலும் சில தொழில்நுட்பப் படிப்புகள்: செவித்திறன், பேச்சு, மொழி நோய்க் குறியியல் படிப்பு (பி.ஏ.எஸ்.எல்.பி.), பி.எஸ்சி. கார்டியோ பல்மனரி பெர்பியூஷன் டெக்னாலஜி, பி.எஸ்சி. ஆபரேஷன் தியேட்டர் அண்ட் அனஸ்தீசியா டெக்னாலஜி, பி.எஸ்சி. கார்டியாக் டெக்னாலஜி, பி.எஸ்சி. கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி, பி.எஸ்சி. டயாலிசிஸ் டெக்னாலஜி, பி.எஸ்சி.
பிசிஷியன் அசிஸ்டெண்ட், பி.எஸ்சி. ஆக்ஸிடெண்ட் அண்ட் எமர்ஜென்ஸி கேர் டெக்னாலஜி, பி.எஸ்சி. ரெஸ்பிரேட்டரி தெரபி, பி.எஸ்சி. நியூரோ எலெக்ட்ரோ பிசியாலஜி, பி.எஸ்சி. கிளினிகல் நியூட்ரிஷன் ஆகிய பாடப்பிரிவுகளில் மூன்று ஆண்டு (அத்துடன் ஓராண்டு நேரடிப் பயிற்சியும் உண்டு) இந்தப் பட்டப் படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம்.
– கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com