சென்னை: நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளித்திட்டத்தில் நன்கொடை வசூலிக்க ஆசிரியர்கள், அலு வலர்கள் நிர்பந்திக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து பள்ளிக்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்டத்தின் வாயிலாக நன்கொடைகளை வசூலிக்க பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் ஆசிரியர்களும் வற்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கு மறுப்பு தெரிவித்து பள்ளிக்கல்வித் துறை அளித்த விளக்கம்: நம்ம ஸ்கூல் நம்ம ஊருப் பள்ளி திட்டம், நிறுவனங்கள் சட்டம் பிரிவு 8-ன்கீழ் தமிழக அரசால் பதிவு செய்யப்பட்டதாகும். அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை கொண்ட பங்களிக்க விரும்பும் தொழில் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தனிநபர்கள் ஆகியோரின் மீதே இத்திட்டத்தின் முழு கவனமும் பதிந்துள்ளது. முக்கியமாக எந்த ஒரு அரசு அலுவலரோ, ஆசிரியரோ எந்த நிதியையும் பெற நியமிக்கப்படவில்லை. இந்த தளத்தில் பெறப்படும் பங்களிப்புகள் வெளிப்படைத்தன்மை கொண்டதாகும்.

