காலணிகள், தோல் பைகள், பெல்ட், பர்ஸ்… இப்படிப் பல்வேறு தோல் பொருள்கள் நமது அன்றாடப் பயன்பாட்டில் உள்ளன. இத்தகைய தோல் பொருள்கள் உள்நாட்டுப் பயன்பாட்டுக்காக உற்பத்தி செய்யப்படுவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தோல் உற்பத்தியிலும் தோல் ஏற்றுமதியிலும் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாட்டில் சென்னை, ஆம்பூர், வாணியம்பாடி, பேரணாம்பட்டு, வேலூர், திண்டுக்கல், திருச்சி, ஈரோடு போன்றவை தோல் பதனீட்டுத் தொழிலுக்கும் தோல் பொருள் உற்பத்தித் தொழிலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களாகத் திகழ்கின்றன. எனவே, காலத்திற்கேற்ற நவீனத் தோல் தொழில்நுட்பப் பயிற்சிகளுடன் கூடிய தனித்திறமையாளர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கேற்ற வகையில் தனித் தொழில்நுட்பப் படிப்புகள் உள்ளன.
லெதர் டெக்னாலஜி: தோல் தொழில்நுட்பம் (லெதர் டெக்னாலஜி) பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்குத் தோல் பதனிடுதல், காலணிகள் உள்ளிட்ட தோல் பொருள்களை உற்பத்தி செய்தல், அதற்குப் பயன்படும் கருவிகளை இயக்குதல் உள்ளிட்ட தோல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் கற்றுத்தரப்படுகின்றன.
லெதர் டெக்னாலஜி பட்டப் படிப்புகளைப் படித்த மாணவர்களுக்குத் தோல் பதனீட்டுக் கூடங்கள், தோல் பதனீட்டுக்குத் தேவையான வேதிப் பொருள்களைத் தயாரிக்கும் ஆலைகள், தோல் ஆய்வு நிறுவனங்கள், தோல் பொருள் உற்பத்தி நிறுவனங்களில் வேலை கிடைக்கும்.
தோல் தொழில்நுட்பப் படிப்புகளைக் கற்றுத்தருவதற்கான முன்னோடி உயர்கல்வி நிறுவனம், சென்னை அடை யாறில் உள்ள சிஎல்ஆர்ஐ எனப்படும் சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட். 1948இல் தொடங்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனம் சர்வதேச அளவில் பிரசித்தி பெற்றது.
சிஎல்ஆர்ஐ நிறுவனமும் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஏ.சி. தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து நடத்தும் பி.டெக். லெதர் டெக்னாலஜி படிப்பில் பிளஸ் டூ வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்கள் சேரலாம். இங்கேயே லெதர் டெக்னாலஜி, ஃபுட்வேர் சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளில் எம்.டெக். படிப்பையும் படிக்கலாம்.
தோல் தொழில் நிறுவனங்களில் டெக்னீ ஷியன், சூப்பர்வைசர் போன்ற இடைநிலைப் பணிகளில் சேர விரும்பும் மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் லெதர் டெக்னாலஜி டிப்ளமோ படித்திருக்க வேண்டும். டிப்ளமோ படித்துவிட்டுத் தொழில் நிறுவனங்களில் வேலை செய்து வருபவர்கள், தங்களது தகுதியை உயர்த்திக் கொள்ள உதவும் வகையில் சிஎல்ஆர்ஐ நிறுவனத்தில் பிடெக் லெதர் டெக்னாலஜி படிப்பைப் பகுதி நேரமாகப் படிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தப் படிப்புக் காலம் மூன்றரை ஆண்டுகள். இதுதவிர, இங்கு தோல் தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு குறுகிய காலப்படிப்புகளும் உள்ளன. லெதர் டெக்னாலஜி படிப்பைக் கற்றுத் தரும் மற்றொரு முக்கியக் கல்வி நிறுவனம் கொல்கத்தாவில் உள்ள அரசு இன்ஜினியரிங் காலேஜ் அண்ட் லெதர் டெக்னாலஜி.
காலணி வடிவமைப்புப் பட்டப் படிப்புகள்: மத்தியத் தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனமான ஃபுட்வேர்டிசைன் அண்ட் டெவலப்மெண்ட் இன்ஸ்டி டியூட்டில் (FDDI) காலணி வடிவமைப்பு தொடர்பான சில படிப்புகளைப் படிக்கலாம்.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் வளாகங்கள் சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, நொய்டா, ஃபுர்சத் கஞ்ச் (லக்னோ அருகே), ரோடக், சிந்த்வாரா, ஜோத்பூர், குணா, அங்கலேஸ்வர் (குஜராத்), சண்டிகர், பாட்னா ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
சென்னை வளாகம் இருங்காட்டுக்கோட்டையில் சிப்காட் ஃபுட்வேர் பார்க் அருகே செயல்பட்டு வருகிறது. சென்னை மையத்தில் ஃபுட்வேர் டிசைன் அண்ட் புரொடக் ஷன், ரீடெய்ல் அண்ட் ஃபேஷன் டிசைன் மெர்சன்டைஸ், ஃபேஷன் லெதர் ஆக்சசரிஸ் டிசைன் ஆகிய பாடப்பிரிவுகளில் மூன்று ஆண்டு பி.எஸ்சி. படிப்பைப் படிக்கலாம். ஃபுட்வேர் டிசைன் அண்ட் புரொடக் ஷன், ரீடெய்ல் அண்ட் ஃபேஷன் மெர்சண்டைஸ், கிரியேட்டிவ் டிசைன் (CAD/CAM) ஆகிய பாடப்பிரிவுகளில் எம்.எஸ்சி. படிக்கலாம்.
காலணி வடிவமைப்பு டிப்ளமோ: சென்னை கிண்டியில் உள்ள சென்ட்ரல் ஃபுட்வேர் டிரெயினிங் இன்ஸ்டிடியூட் (CFTI) 1957ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. காலணி வடிவமைப்பு, காலணித் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி அளிக்கும் இந்த மத்திய அரசுக் கல்வி நிறுவனத்துக்கு வாணியம்பாடியில் விரிவாக்க மையம் உள்ளது. இந்தப் பயிற்சி நிலையத்தில் ஃபுட்வேர் மானுபாக்சரிங் அண்ட் டிசைன் டிப்ளமோ (DFMD) இரண்டு ஆண்டுப் படிப்பில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம்.
ஃபுட்வேர் டெக்னாலஜி என்கிற ஒன்றரை ஆண்டு போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ படிப்பில் (PGDFT) படிப்பில் பட்டதாரி மாணவர்கள் சேரலாம். ஃபுட்வேர் டெக்னாலஜி ஓராண்டு போஸ்ட் டிப்ளமோ படிப்பில் டிப்ளமோ படித்த மாணவர்கள் சேரலாம். இதுதவிர, காலணித் தொழில்நுட்பம் தொடர்பாக ஓராண்டுப் படிப்புகளும், குறுகிய கால, பகுதி நேரப் படிப்புகளும் உள்ளன.
– கட்டுரையாளர், மூத்த பத்திரிகையாளர்; pondhanasekaran@yahoo.com