தொல்லியல் துறையில் இணையப் பாதுகாப்பு என்பது தரவைப் பாதுகாப்பது மட்டுமல்ல, அந்தத் தரவுகள் கொண்டுள்ள பண்பாட்டு மரபைப் பாதுகாப்பது பற்றியதும்கூட. தொல்லியில் ஆராய்ச்சி மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் இந்தத் துறையில் இணையப் பாதுகாப்பின் பங்கு குறித்து தெரிந்துவைத்திருப்பது நல்லது.
தொல்லியல் துறை தொடர்பான தரவுகளைப் பாதுகாப்பதன் மூலம், இயற்கைப் பேரழிவு அல்லது தகவல் திருட்டைப் போன்று சவாலான சூழலின்போது ஆபத்தில் இருக்கக்கூடிய விலைமதிப்பற்ற வரலாற்றுத் தகவல்களைப் பாதுகாக்க முடியும். எடுத்துக்காட்டாக, பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய வரலாற்றுத் தளங்களை லேசர் ஸ்கேன் செய்வதன் மூலம் தொல்லியல் தளத்தின் விவரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்க முடியும்.
அகழாய்வு செய்யப்படாத தளங்கள் அல்லது அழிந்துபோகும் நிலையில் உள்ள கலைப்பொருள்களின் இருப்பிடம் போன்ற முக்கியமான தரவுகளை அழிப்பவர் களிடமிருந்தும், தனிப்பட்ட லாபத்திற்காக அவற்றைச் சுரண்டுபவர்களிடமிருந்தும் பாதுகாக்க வேண்டும்.
தீம்பொருள் (malware), பணையத் தீநிரல் (ransomware), அங்கீகரிக்கப்படாத அணுகுதல் போன்ற இணையவெளி அச்சுறுத்தல்களால் தரவு இழப்பு அல்லது தகவல் திருட்டு நடக்கலாம். இவற்றைத் தடுக்க இணையப் பாதுகாப்புத் தளத்தை (firewall) செயல்படுத்தும்போது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும். குறியாக்கம் (Encryption), இருகாரணி அங்கீகாரம் (two factor authentication) போன்றவற்றைத் தீவிரப்படுத்துவதன் மூலம் தகவல் களவாடப்படுவதைத் தடுக்க முடியும்.
டிஜிட்டல் கேமராக்கள், ட்ரோன்கள், முப்பரிமாண (3D) ஸ்கேன்கள், லேசர் ஸ்கேனர்கள் (Lidar) மூலம் தொல்லியில் துறையில் தரவுகளைத் தொகுக்கலாம். இந்தத் தொல்லியல் தரவுகள் பெரும்பாலும் நிறுவனச் சேவையகங்கள், மேகக்கணினி சேவைகள் (cloud services), டிஜிட்டல் காப்பகங்களில் சேமிக்கப்படுகின்றன.
இந்தக் களஞ்சியங்கள் காப்புப்பிரதிகள், குறியாக்கம், பாதுகாப்பான வலையமைப்பு (network) ஆகியவற்றின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. இதை உறுதிப்படுத்தவே இணையப் பாதுகாப்பு முன்னெடுப்புகள் தேவைப்படுகின்றன. நவீனத் தொல்லியல் ஆராய்ச்சியில் இணையத் தொல்லியல் பிரிவு முக்கியமானது.
– கட்டுரையாளர், உதவிப் பேராசிரியர்; iniyane@gmail.com