வேலைவாய்ப்புத் துறையைப் பொறுத்தவரை இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் பல புது வேலை வாய்ப்புகள் உருவாகி இருப்பதைச் செய்திகளில் காண முடிகிறது. இந்தியா மட்டுமல்ல எண்ணற்ற உலகளாவிய வாய்ப்புகளும் இருக்கின்றன. இதில் எவற்றையும் மாணவர்கள் தவறவிட்டுவிடக் கூடாது.
தேடல்: கல்வியாக இருந்தாலும் வேலையாக இருந்தாலும் இந்தத் தருணத்தில் என்னென்ன வாய்ப்புகள் இருக்கின் றனவோ அவற்றை மாணவர்கள் தேடித் தெரிந்து கொள்ள வேண்டும். எந்த வாய்ப்புக் கிடைத்தாலும் அதை விருப்பப்பட்டுச் செய்ய வேண்டும், அதுவும் நிகழ்காலத்திலேயே அதைத் திறம்படச் செய்ய வேண்டும்.
தேடல் என்பது வெறும் தகவல் திரட்டாக இருக்கக் கூடாது. அந்தத் தேடல் மேலோட்டமாக இல்லாமல் நேரம் போவதே தெரியாத அளவு ஆழமான தேடலாக இருக்க வேண்டும். உங்களுடைய தேடல் எவ்வளவு ஆழமாகவும் விரிவாகவும் இருக்கிறதோ அவ்வளவு வைரங்கள் தென்படும்.
எளிதாகச் சொல்ல வேண்டுமென்றால் கஷ்டப்பட்டுத்தேடக் கூடாது, இஷ்டப்பட்டுத் தேட வேண்டும். இப்படியான தேடல் இருந்தால் அதுதான் உங்களுக்கு விருப்பமான துறையை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்! பொதுவாக ஆர்வ மிகுதியில் ஒரு சில துறைகளை முன்னிலைப்படுத்துவதால், வேறு சில சிறந்த துறைகளைக் கவனிக்காமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
என்ன செய்யலாம்? – நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைப் போல எங்கு படிக்கிறீர்கள் என்பதும் ரொம்ப முக்கியம். தற்போதைய சூழலையும் தொலைநோக்குப் பார்வையையும் கருத்தில் கொண்டு உயர் கல்விப் படிப்பை, வேலையைத் தேர்வுசெய்ய வேண்டும். இதனால், உங்கள் விருப்பத் துறைக்கு முன் வேறொரு துறையில் அல்லது அதற்கு நெருக்கமான ஒரு துறையில் பிரகாசமான வாய்ப்பு இருக்கலாம். அதைத் தவறவிட்டுவிடக் கூடாது என்பதே இதில் இருக்கும் சூட்சுமம்.
உயர் கல்விப் படிப்பு, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றைப் பெறுவதற்கான தேடலை அருகிலுள்ள ஊர்கள், பகுதிகளிலேயே வைத்துக்கொள்வதைத் தவிர்க்கலாம். அதாவது உள்ளூர், இந்தியா என்கிற அளவில் மட்டுமே உள்ள அந்தத் தேடலை உலகளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும். அப்படியான தேடல் இருந்தால் மட்டுமே கல்வி – வேலைவாய்ப்பில் உயர் நிலையை அடைய முடியும்.
உதாரணத்துக்கு, தமிழ் ஆராய்ச்சிகள் தொடர்பாக உங்களுக்கு விருப்பம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங் களைத் தாண்டி பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற வெளிநாட்டில் உள்ள ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களைத் தேடி, அங்கிருக்கும் வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டும்.
உலக அளவில் முன்னணிப் பல்கலைக்கழ கங்கள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சிக் கூடங்கள் போன்றவற்றில் உங்கள் விருப்பத் துறையின் தற்போதைய நிலை என்ன, எதிர்காலத் திட்டங்கள் என் னென்ன என்பதைத் தெரிந்துகொண்டு அப்படிப்பட்ட ஓர் இடத்தில் உயர் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கு அகத்திலும் புறத்திலும் ஆழமான தேடல் இருக்க வேண்டும்.
திறன் குவிப்பு: கல்வி, ஆராய்ச்சி அல்லது வேலையில் நீங்கள் எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையைச் சார்ந்து திறன்களை வளர்த்துக்கொள்வது அவசியம். அந்தத் திறன் வாயிலாக வேறொரு துறையில் சிறப்பாக இயங்கவும் உங்களுடைய திறன்களை அவ்வப்போது மெருகேற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
நீங்கள் எந்த ஓர் இடத்துக்கு விண்ணப்பித்தாலும், அது கல்வியாக, வேலைவாய்ப்பாக இருக்கலாம். இது போன்றதொரு சூழலுக்கு ஏற்ப ஏற்கெனவே உங்களின் திறன்களை மெருகேற்றி வைத்திருந்தால், இந்தத் திறமைசாலியைத் தவறவிடக் கூடாது என்கிற எண்ணம் உங்களைத் தேர்ந்தெடுப்பவருக்கு ஏற்படும்.
வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. சரியான தேடலும் திட்டமிடலும் இருந்தால் தொழில் வாழ்க் கையில் வெற்றி நிச்சயம். இளநிலைப் படிப்பு என்ன படித்திருந்தாலும், அடுத்து என்ன முதுநிலைப் படிப்புகளைப் படிக்கலாம், ஆராய்ச்சித் துறையில் இந்தியாவின் நிலை என்ன, உலகளாவிய புது வேலைவாய்ப்புகளை எங்கே, எப்படித் தேடலாம், அதற்குத் தயாராவது எப்படி என்பது போன்ற உயர் கல்வி, ஆராய்ச்சி, வேலை வாய்ப்பு தொடர்பாக அறியப்படாத தகவல்களை வரும் வாரங்களில் ஆழமாக அலசுவோம்.
– கட்டுரையாளர், உயர் கல்வி ஆலோசகர்; chez@indiacollegefinder.org