சென்னை: நாடு முழுவதும் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் அக்டோபர் 14 முதல் நவம்பர் 18-ம் தேதி வரை நடைபெறும் என்று தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம், பள்ளிக் கல்வியை தொலைநிலை வழியில் பயிற்றுவித்து வருகிறது. அதனுடன், திறன் மேம்பாட்டுக்கான தொழிற் படிப்புகளையும் வழங்குகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவர்கள் இதன் வாயிலாக பலன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுக்கால அட்டவணையை தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பொதுத் தேர்வுகள் வரும் அக். 14-ல் தொடங்கி நவ. 18-ம் தேதி வரை நடைபெறும். இந்த தேதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது. விரிவான தேர்வுக்கால அட்டவணையை மாணவர்கள் nios.ac.in எனும் வலைதளத்தில் அறிந்து கெள்ளலாம்.
மேலும், ஹால்டிக்கெட்கள் தேர்வுகளுக்கு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்படும். பொதுத் தேர்வுகளின் முடிவுகள் தேர்வு முடிந்த 7 வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்று, தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் சார்பில் வெளியான அறிவிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.